சட்டவிரோத வாடகை கார் சேவையைப் பயன்படுத்திப் பயணங்களை முன்பதிவு செய்ய உதவிய செயலியொன்றை இனி சிங்கப்பூரில் பதிவிறக்கம் செய்யமுடியாது.
இன்டிரைவ் (inDrive) எனும் செயலி குறித்துப் பலர் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்தார்.
இன்டிரைவ் செயலி, வாடகை கார் சேவையை வழங்குகிறது. ஒரு பயணத்துக்கு எவ்வளவு கட்டணம் கொடுக்கமுடியும் என்பதைப் பயனீட்டாளர்கள் அதில் குறிப்பிடலாம். பின்னர் அதை ஏற்றுக்கொள்ளும் ஓட்டுநரை அவர்கள் தெரிவுசெய்யமுடியும்.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் செல்லும் சேவைகளை அந்தச் செயலி வழங்கியதாகவும் சட்டவிரோத வாடகை கார் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் திருவாட்டி சுன் சொன்னார்.
செயலியை இனிமேல் சிங்கப்பூரில் பதிவிறக்கம் செய்யமுடியாது என்றார் அவர்.
சிங்கப்பூரில் உள்ள ஓர் இடத்திற்குப் போகப் பயனீட்டாளர்கள் முயன்றால், இன்டிரைவ் செயலி இங்குக் கிடைக்காது எனும் தகவல் திரையில் தோன்றும் என்றார் திருவாட்டி சுன்.
இன்டிரைவ் இணையத்தளத்தின்படி, அது 50 நாடுகளில் 980க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுகிறது. அதன் செயலி 3.6 மில்லியனுக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தனியார் வாடகை வாகன ஃபேஸ்புக் குழுக்களில் இன்டிரைவ் குறித்து ஏராளமானோர் விவாதித்தனர். செயலியைப் பற்றி நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் புகார் செய்யுமாறு அவர்கள் கூறியிருந்தனர். ஓட்டுநர்கள் பலர் சட்டவிரோதச் சேவைகளை வழங்கியதாகவும் பயனீட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சிடிஜி ஸிக், ஜியோலாஹ், கோஜெக், கிராப், ரைடு, டாடா, டிரான்ஸ்-கேப் (CDG Zig, Geolah, Gojek, Grab, Ryde, Tada and Trans-cab) ஆகியவை சிங்கப்பூரில் வாடகை கார் சேவை வழங்க அனுமதிபெற்ற நிறுவனங்கள் என்று ஆணையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.