தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரிவிதிப்பின் தாக்கம்: சிங்கப்பூரின் ஏற்றுமதி வளர்ச்சி 5.4% என குறைந்தது

2 mins read
4645fda9-d891-440d-9b59-73a6f816282c
சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்தபோதிலும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வளர்ந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதியாகக் கருதப்படும் எண்ணெய் சாரா ஏற்றுமதி (Nodx) மார்ச் மாதம் மெதுவான வளர்ச்சி கண்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு காரணமாக உலகளாவிய வர்த்தகத்தில் நிலவிய குழப்பம் அதற்கு முக்கியக் காரணம்.

ஏற்றுமதி நிலவரம் தொடர்பான விவரங்களை வியாழக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, வரிவிதிப்பால் எழுந்துள்ள நிலவரங்களை, தான் உற்று நோக்கி வருவதாகவும் தேவைப்பட்டால் இவ்வாண்டுக்கான ஏற்றுமதி முன்னுரைப்பில், சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆண்டு அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் 7.6 விழுக்காடு வளர்ச்சி அடைந்த ஏற்றுமதி, மார்ச் மாதம் 5.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது. எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும் அது மிகவும் குறைவு.

மார்ச் மாத ஏற்றுமதி 14.1 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் முன்னுரைக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், மின்னணு மற்றும் மின்னணு சாராத சாதனங்களின் ஏற்றுமதி அந்த மாதம் நல்ல வளர்ச்சி கண்டது.

மின்னணுத் துறை மட்டும் 11.9 விழுக்காட்டு வளர்ச்சி கண்டது. ஓராண்டுக்கு முன்னர் இருந்த அடிமட்ட நிலவரத்தில் இருந்து அந்தத் துறை வளர்ந்திருக்கிறது. பிப்ரவரியில் அதன் வளர்ச்சி 6.9 விழுக்காடாக இருந்தது.

மார்ச் மாத வளர்ச்சிக்கு, தனிநபர் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி கைகொடுத்தது.

அதேநேரம், மின்னணு சாராத சாதனங்களின் ஏற்றுமதி 3.8 விழுக்காடு வளர்ந்தது. பிப்ரவரியில் பதிவான 7.7 விழுக்காட்டைக் காட்டிலும் அது கிட்டத்தட்ட பாதியளவு.

தைவான், இந்தோனீசியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி வளர்ந்தபோதிலும் சிங்கப்பூரின் ஆகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையான சீனாவுக்கான ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்தது.

அதேவேளை, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 5.7 விழுக்காடு வளர்ச்சி பதிவானது. இருப்பினும் பிப்ரவரியில் பதிவான 21.5 விழுக்காட்டைக் காட்டிலும் அது மிகவும் குறைவு.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வர்த்தகம் மார்ச் மாதம் 3.4 விழுக்காடு வளர்ந்தது. பிப்ரவரியில் அது 4.6 விழுக்காடாக இருந்தது.

இந்த ஆண்டு முழுமைக்குமான ஏற்றுமதி 1 முதல் 3 விழுக்காடு வரை வளரும் என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் முன்னுரைத்து இருந்தது.

குறிப்புச் சொற்கள்