தமிழ் பேசும் முஸ்லிம் குடும்பங்களை ‘மதரசா’ எனப்படும் இஸ்லாமிய சமயப் பள்ளிகளுக்குத் தயார்ப்படுத்தும் வகையில் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் ‘மதரசா தயார்நிலைத் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இஸ்லாமியச் சமூகத்தினரில் விருப்பமுள்ளவர்களைத் தாய்மொழிக் கல்வியைப் பயின்றவாறே சமயம் சார்ந்த கல்விக்காகவும் வாழ்க்கைத் தொழிலுக்காகவும் தயார்ப்படுத்துவது இதன் நோக்கம்.
முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) இதனைத் தெரிவித்தார்.
இந்திய முஸ்லிம் சமூகத் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு, ‘முயிஸ்’ (MUIS) எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்தால் ஆதரிக்கப்படும் இந்தத் திட்டம், இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் அமைப்புகளிலும் அறிமுகம் செய்யப்பட்டதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
“மதரசா இர்ஸ்யாத் ஸுஹ்ரி அல் இஸ்லாமியாவில் தற்போது தொடக்கப் பள்ளி மாணவர்கள் அறுவர் தமிழைத் தங்கள் தாய்மொழியாக எடுத்துப் பயின்று வருகின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலுள்ள ஆறு முழுநேர மதரசாக்களில் தற்போது இர்ஸ்யாத் ஸுஹ்ரி அல் இஸ்லாமியாவில் மட்டும் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
இவ்வாண்டிலிருந்து தமிழ் மாணவர்கள் வெளியே எந்த மொழி நிலையத்திற்கும் செல்லாமல் தங்கள் பள்ளியிலேயே தமிழ் கற்க முடிவதாக தமிழ் முரசிடம் முயிஸ் தெரிவித்தது.
மொழித்திறனைக் கடந்து, சமயத் துறையில் வாழ்க்கைத்தொழில் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு ஆழ்ந்த சமய அறிவு இருப்பதுடன், அந்த அறிவைச் சிங்கப்பூரின் பல இன, சமயச் சூழலுக்குப் பொருத்தக்கூடிய திறனும் இருக்க வேண்டும் என் வலியுறுத்தினார் இணைப் பேராசிரியர் ஃபைஷால்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் பேசுவோர் உட்பட சமய போதகர்கள் அனைவரும், முயிஸ் வழங்கும் வாழ்க்கைத்தொழில் மேம்பாட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தலாம். இதில் தொடர் தொழில்சார் கல்வித் திட்டமும் (Continuing Professional Education) அடங்கும் என்று டாக்டர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
இளையர்களுக்கு ஆற்றல் அளிக்கும் புதிய முயற்சிகள்
பள்ளிவாசல்களில் இளையர்களை ஈடுபடுத்தி, அவர்களைத் தலைமைத்துவத்திற்கு மேம்படுத்தும் திட்டங்கள் பலவற்றை முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டிலிருந்து நெக்ஸ்ட்ஜென் எஸ்ஜி (NextGen SG) பள்ளிவாசல் இளையர் கருத்தரங்கு, முஸ்லிம் உயர்கல்வி நிலைய மன்றத்தின் மாணவத் தலைவர்களுக்கான கருத்தரங்கு, முஃப்தியுடனான கலந்துரையாடல், ரமலான் இளையர் சவால் எனப் பல்வேறு இளையர் சார்ந்த நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டும் முயிஸ், மதரசாக்களிலும் பள்ளிவாசல்களிலும் உயர்கல்வி நிலையங்களிலும் நடத்தப்படும் ஆலோசனைக் கலந்துரையாடல்கள்வழி ஆதரவு வழங்கவுள்ளது.
சமய, சமூக அடையாளத்தைப் பற்றிக்கொண்டே வேலையிடத்தில் சிறப்பாகச் செயலாற்றுவதற்கு வழிகாட்டும் ‘இளையர் சந்திப்புக் கலந்தாய்வுகள்’ (Youth Meets Consultations) என்ற ஏடுக்கான யோசனை இத்தகைய கலந்துரையாடல்களிலிருந்து தோன்றியதாக முயிஸ் குறிப்பிட்டது.

