‘பருக்களைப் பிதுக்கும்’ (pimple popping) விளையாட்டுப் பொம்மை, கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூரின் பயனீட்டாளர் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
மாதிரி ஊசிகளைக் கொண்டு தண்ணீர் அல்லது காற்றை நிரப்பி விளையாடப்படும் இந்த பொம்மைகளைப் பிள்ளைகளுக்கு வாங்கித் தரவேண்டாம் என்று பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம் (சிபிஎஸ்ஓ) பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கூர்மையான மாதிரி மருத்துவ ஊசிகளைக் கொண்டு இந்த பொம்மைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விவரிக்கும் காணொளிகளை சமூக ஊடகங்களில் தாங்கள் பார்த்திருப்பதாக சிபிஎஸ்ஓ தெரிவித்தது. இந்தப் பொம்மைகள், மனவுளைச்சலைத் தணிக்க உதவும் பொருள்கள் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன.
“அந்தக் கூர்மையான ஊசி தோலைத் துளைக்கக்கூடும். ஊசி சுத்தமாகவும் இருக்காது. அதனால் கூர்மையான மாதிரி மருத்துவ ஊசிகளைஎவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது என்று தெரியாத குழந்தைகளுக்குக் கடுமையான காயங்களும் தொற்றுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது,” என்று சிபிஎஸ்ஓ எச்சரித்தது. சிபிஎஸ்ஓ, சிங்கப்பூர்ப் போட்டி, பயனீட்டாளர் ஆணையத்தின்கீழ் செயல்படுகிறது.
பொம்மையில் நிரப்பப்படும் காற்று, ஊசி மூலம் உடலின் ரத்தக் குழாய்க்குள் சென்றால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடும், மரணம்கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொம்மைகளை ஏற்கெனவே வைத்திருப்போர் ஊசியை வீசிவிட்டு பொம்மையை, எளிதில் திறக்கமுடியாத கலனில் வைக்கவேண்டும் என்றும் சாதாரண குப்பையைப் போல் பொம்மையை எறியவேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பினாங்கு மாநில அரசாங்கம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) இந்த பொம்மையைத் தடைசெய்தது.

