தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
செய்தித்துறையில் சாதிக்க விழையும் கல்விமான்களுக்கு அங்கீகாரம்

விஷ்ருதாவிற்கு ‘எஸ்­பி­எச் மீடியா’ உபகாரச் சம்பளம்

3 mins read
cc0526c1-56fe-40a4-bb63-f742845e155a
தமிழ் முர­சுக்­கான உப­கா­ரச் சம்­ப­ளத்­தை குமாரி விஷ்ருதா நந்தகுமாருக்கு வழங்கினார் ‘எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்’­ தலை­வர் கோ பூன் வான். - படம்: எஸ்பிஎச் மீடியா

இதழியல் துறை வாயிலாகச் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆர்வம், தமிழ்மொழி மீதுள்ள தீராத பற்று ஆகிய இரண்டும்தான் ‘எஸ்­பி­எச் மீடியா’ செய்­தித்­துறை உப­கா­ரச் சம்பளத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் காரணம் என்று  கூறினார் தமிழ் முரசுக்கான உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்­ற விஷ்ருதா நந்தகுமார், 19.

தமிழ் முரசு தனது 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், ‘எஸ்­பி­எச் மீடியா’ வழங்கிய தமிழ் முர­சுக்­கான உப­கா­ரச் சம்­ப­ளத்தைப் பெற்றுள்ள இரண்டாம் கல்விமான் மற்றும் முதல் பெண் எனும் பெருமையைப் பெறுகிறார் தேசியப் பல்கலைக்கழகத்தில் உயிர்அறிவியல் பட்டப்படிப்பு பயிலவிருக்கும் குமாரி விஷ்ருதா.

தமிழ் முரசில் சில வாரம் பயிற்சி மாணவியாகச் சேர்ந்திருந்த அவர், அடுத்த பல ஆண்டுகளுக்குத் தமிழ் முரசுக்குப் பங்காற்ற வேண்டும் என்று முடிவு செய்ததற்கான காரணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘பயிற்சிக்காக வந்தேன். அப்போது நாட்டின் பொதுத் தேர்தல், தமிழ் முரசின் வரலாற்றைக் கொண்டாடும் 90ஆம் ஆண்டுநிறைவு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றி உலகிற்கு அறிவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

‘‘அத்துடன், சாதாரண மக்களின் அக்கறைகள், அரசாங்கத்தின் கொள்கைகள் எனப் பல்வேறு தரப்பினரின் குரலை ஒருசேரப் பிரதிபலிக்க வலுவான வாய்ப்பை நல்கியது தமிழ் முரசு.

‘‘சமூகத்திற்கான செழுமையான பங்களிப்பைச் சீராக நல்கிட செய்தித்துறையே என் வாழ்க்கைத்தொழில் துறையாக மாற வேண்டும் என்று அப்போதுதான் ஆசைப்பட்டேன்,’’ எனச் சொன்னார் குமாரி விஷ்ருதா.

அதன் பிறகு உபகாரச் சம்பளத்திற்கான தேர்வில் பல சுற்றுகளைக் கடந்து தான் விரும்பிய செய்தித் துறையில் அடுத்த பல ஆண்டுகளுக்கான இடத்தைப் பதிவுசெய்துள்ளார் இந்த இளம் சாதனையாளர்.

தரமான செய்தித்துறையைப் பேணும் இலக்குடனும், ‘எஸ்பிஎச்’ இதழியல் கட்டமைப்பில் தொடர்ந்து இளம் திறனாளர்களை இணைக்கும் நோக்குடனும் வழங்கப்படும் ‘எஸ்­பி­எச் மீடியா’ உபகாரச் சம்பளம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) மாலை நடைபெற்றது.

விழாவில் ஆதிக்கம் செலுத்திய சிங்கப்பெண்கள்

இந்த ஆண்டுக்கான விழாவில் ‘எஸ்­பி­எச் மீடியா’ உபகாரச் சம்பளத்திற்கான உன்னத விருது இருவருக்கும், ‘எஸ்­பி­எச் மீடியா’ தெமாசெக் அறக்கட்டளை உபகாரச் சம்பளம் ஒருவருக்கும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு இவ்விருதுகளை பெற்ற மூவருமே பெண்கள்.

இதற்கிடையே, இந்த விருது குறித்துக் கருத்துரைத்த தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர், புதிய கல்விமானாகத் தமிழ் முரசில் இணைந்துள்ள குமாரி விஷ்ருதாவிற்கு வாழ்த்து கூறினார்.

‘‘விஷ்ருதாவிற்கு இதர வாய்ப்புகள் பல இருந்தும், தமிழ் மொழியின்மீது அவர் கொண்டிருந்த பற்றின் காரணமாகப் பல சவால்களையும் கடந்து இந்த உயரிய அங்கீகாரத்தை வென்றுள்ளார்,’’ என்று குறிப்பிட்ட திரு ராஜா, துறைக்குத் தேவையான திறன்களிலும் நற்பண்புநலனிலும் தனித்துவமிக்கவர் அவர் என்றும் குறிப்பிட்டார்.

நூற்றாண்டை நோக்கிய தமிழ் முரசின் பயணத்தில், இத்தகைய உபகாரச் சம்பளம் எதை நோக்கிய தேடல் என்பது குறித்தும் விவரித்தார் திரு ராஜா.

‘‘உலக நடப்புகளில் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்ட இளையர்கள் ஊடகத்துறையில் தடம்பதிக்க ஊக்குவிப்பதே இலக்கு.

‘‘இன்றைய சூழலில் பரவலாக இத்துறைக்கு இளையர்கள் வருவதை ஆதரிப்பதையும், உள்ளூர்ப் பட்டதாரிகளை இத்துறைக்கு வலுவாக ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட பயணம்தான் இத்தகைய அங்கீகாரத்திற்கான தேடல்,’’ என்று சொன்னார் திரு ராஜா.

விழாவில் சிறப்புரையாற்றிய ‘எஸ்பிஎச் மீடியா’ தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், ‘‘ஆற்றல்மிக்கவர்களை அடையாளம் காணும் ‘எஸ்பிஎச்’ ஊடகத்தின் இந்த முயற்சிகள் வருங்காலத்திற்கான செய்தி அறையை உருவாக்குவதற்கான எங்கள் கடப்பாட்டின் முக்கிய அங்கம்,’’ என்றார்.

மாணவர்கள் இதழியல் துறையில் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதற்கு ஆதரவளித்த குடும்பத்தினருக்கு அவர் நன்றி கூறினார்.

குறிப்புச் சொற்கள்