பிடாடாரி பூங்கா, அல்காஃப் ஏரி அதிகாரபூர்வ திறப்பு

2 mins read
f7e8411d-3767-407e-9fb6-18326057e921
அல்காஃப் ஏரி சிங்கப்பூரின் முதல் வகையான பல செயல்பாட்டு வடிகால் உள்ளமைப்பாகும்.  - படம்: பொதுப் பயனீட்டுக் கழகம்

பிடாடாரி பூங்காவையும் அல்காஃப் ஏரியையும் பொதுமக்கள் பார்வைக்காக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்,

பூங்காவின் மரபுடைமை வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பிடாடாரி பூங்கா இவ்வட்டாரத்தின் முன்னுரைக்கப்பட்ட ‘தோட்டத்தில் ஓர் சமூகம்’ எனும் இலக்கில் மற்றொரு மைல்கல் என்று கூறினார்.

பிடாடாரி குடியிருப்புப் பேட்டையை உருவாக்கும்போது பசுமைப் பாதைகளை வட்டாரத்துடன் ஒருங்கிணைப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார் திரு லீ.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், பிடாடாரி பகுதியில் 10 விழுக்காட்டிற்கும் அதிகமான நிலப்பகுதி பிடாடாரி பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டது என்றும் இவ்வட்டாரத்தின் பெருந்திட்டத்தின் முக்கிய அம்சம் பசுமை சார்ந்த வாழ்விடங்கள் என்றும் தெரிவித்தார்.

தேசியப் பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், தேசிய மரபுடைமை வாரியம் ஆகியவற்றுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் இணைந்து உருவாக்கிய இப்பூங்காவில், வனப்பகுதி, ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள் என இயற்கை சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன.

தமிழ் முரசிடம் பேசிய பொதுப் பயனீட்டுக் கழக நீர்பிடிப்பு மற்றும் நீர்வழிகள் துறையின் மூத்த முதன்மை பொறியாளர் (வடிகால் திட்டமிடல்) காயத்ரி கல்யாணராமன், பல செயல்பாட்டு வடிகால் உள்ளமைப்பு கொண்ட சிங்கப்பூரின் முதல் ஏரி அல்காஃப் ஏரி என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய திருவாட்டி காயத்ரி, “கனமழையின்போது இந்த ஏரி தற்காலிகமாக மழை நீரைத் தேக்கி வைக்கும் குளமாகவும், இதர காலங்களில் பொதுமக்களுக்கு சமூக, பொழுதுபோக்கு அம்சமாகவும் செயல்படும்,” என்று விவரித்தார்.

கனமழையின்போது ஏரியின் நீர்மட்டம் 1.1 மீட்டரிலிருந்து ஏறத்தாழ 4 மீட்டர் அளவு வரை உயரக்கூடும் என்றார் அவர். வெள்ள நீரோட்டத்தை மெதுவடையச் செய்யவும் ஒழுங்குபடுத்தவும் வெள்ள அபாயங்களைத் தணிக்க உதவும் வகையிலும் அல்காஃப் ஏரி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இவ்விடம், வடிகால் மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், இயற்கையோடு இணைந்த பசுமை வாழ்வியலை நல்கும் கழகத்தின் புத்தாக்கமிக்க அணுகுமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பிடாடாரி பூங்கா வடிவமைப்பு குறித்துப் பேசிய தேசிய பூங்காக் கழகத்தின் பூங்காத் துறை இயக்குநர் இ.நந்தினி, அங்குள்ள காட்டுப்பகுதிகள், புல்வெளிகள், சதுப்புப்பகுதிகள் பல்வேறு உயிரினங்களுக்கான வாழ்விடமாகத் திகழும் என்று தெரிவித்தார்.

பிடாடாரி பூங்காவை அமைக்கும்போது பூங்காவில் ஏற்கெனவே இருக்கும் முதிர்ந்த மரங்களை எவ்வாறு எந்தவொரு சேதமுமின்றி தக்கவைத்து அவற்றைப் புதிய பூங்காவின் ஓர் அம்சமாக இடம்பெறச் செய்யலாம் என்று திட்டமிடப்பட்டதாக திருவாட்டி நந்தினி கூறினார்.

பலவகையான உயிரினங்கள், புலம்பெயர்ந்து வரும் பறவைகள், ஏராளமான மலர்கள், கனி மரங்கள் என இயற்கையுடன் ஒருங்கிணைந்த பசுமைச் சரணாலயமாகத் திகழும் பிடாடாரி பூங்காவில் குடியிருப்பாளர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் தருணங்களை அனுபவித்து மகிழலாம்.

குறிப்புச் சொற்கள்