வருங்காலத்தில் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் மொழி, பண்பாடு, பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்குக் குடியேறிகளின் வெற்றிகரமான சமூக ஒருங்கிணைப்பு முக்கியம் என்று மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ‘சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாட்டின்’ சிறப்புக் கலந்துரையாடல் அங்கத்தில் தமது கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் இந்தியர்கள் கிட்டத்தட்ட 7.8 விழுக்காடு மட்டுமே. இருந்தாலும், தொழில், அரசாங்கம், அரசியல் உள்ளிட்ட பல துறைகளிலும் இந்தியச் சமூகம் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது என்று திரு தினேஷ் குறிப்பிட்டார்.
“நீண்ட காலமாகவே இந்தியச் சமூகம் தனது மக்கள்தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான சாதனைகளைப் புரிந்து வருகிறது. மக்கள்தொகை சிறிதெனினும், நாடாளுமன்றம், அமைச்சரவை, தனியார் துறை என அனைத்து இடங்களிலும் நமக்குச் சிறந்த பிரதிநிதித்துவம் இருப்பதைக் காண முடிகிறது,” என்று அவர் கூறினார்.
அதேவேளையில், சமூகத்தின் மக்கள்தொகை நிலவரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியச் சமூகத்தின் மொத்தக் கருவள விகிதம் (Total Fertility Rate) கிட்டத்தட்ட 0.9 ஆக உள்ளது என்றும் இது மக்கள்தொகையை ஈடுசெய்யத் தேவையான 2.1 என்ற அளவைவிட மிகவும் குறைவு என்றும் அமைச்சர் தினேஷ் சுட்டினார்.
இதன் காரணமாக உள்ளூர் இந்திய மக்கள்தொகை குறைந்து வந்தாலும், குடியேற்ற தேசம் (migrant nation) என்ற சிங்கப்பூரின் நீண்டகால அடையாளம் அதன் எதிர்காலத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும் என்றார் அவர்.
“இந்தியாவில் உள்ள பலர் இங்கு வந்து தங்கள் குடும்பங்களை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்,” என்று கூறிய அவர், புதிதாக வருபவர்களுக்கும் நீண்ட காலமாக இங்கு வசிப்பவர்களுக்கும் இடையே தலைமுறை தாண்டிய இணக்கமான ஒருங்கிணைப்பை உறுதிசெய்வதே சவால் என்றும் சொன்னார்.
கலை, மொழி, பாரம்பரியத்தைத் தக்கவைக்க இந்தியாவுடன் வலுவான பண்பாட்டு, மொழித் தொடர்புகளைச் சமூகம் பேண வேண்டும் என்றும் அதே வேளையில் உள்ளூர்ச் சூழலுக்கு ஏற்ப அந்தப் பாரம்பரியங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் திரு தினேஷ் வலியுறுத்தினார்.
பல கலாசாரங்களின் தாக்கத்தால் உருவான சிங்கப்பூருக்கே உரித்தான உணவான மீன் தலைக் குழம்பைச் சான்றாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய தகவமைப்புத் திறன் நீண்ட காலமாகவே உள்ளூர்ச் சமூகத்தின் பலமாக இருந்து வருகிறது என்றார்.
“சிங்கப்பூரில் சில நேரங்களில் நமக்கு எலுமிச்சம் பழங்கள் கொடுக்கப்படலாம். ஆனால், நாம் அதிலிருந்து சாறு பிழிந்து பருகுவதோடு நின்றுவிடுவதில்லை. அதைச் சிறப்பாகத் தயாரித்து உலகிற்கே விற்பனை செய்கிறோம்,” என்று கூறிய திரு தினேஷ், இளையர்கள் தடைகளை வாய்ப்புகளாக மாற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
உலக நாடுகள் பலவும் குடியேறிகளுக்கு எதிராகச் செயல்படும் போக்கை (Nativism) பற்றிப் பேசிய அவர், சிங்கப்பூரின் வரலாறு, சமூகக் கட்டமைப்பைக் கருத்தில்கொண்டு அத்தகைய அணுகுமுறையை நாம் பின்பற்ற முடியாது என்றார்.
16 முதல் 35 வயதுடைய கிட்டத்தட்ட 50 இளையர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது. இந்தியச் சமூகத்தின் எதிர்காலப் போக்கு, இளையர்களின் விருப்பங்கள், ஆர்வங்கள் குறித்த அடித்தளக் கருத்துகளைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஆறு மாதத் தொடர் நிகழ்ச்சிகளின் தொடக்கமாக அந்நிகழ்ச்சி அமைந்தது.

