சட்டவிரோத வனவிலங்கு வணிகத்தை இலக்காகக் கொண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல நாடுகளில் நடத்தப்பட்ட அனைத்துலகக் காவல்துறை (இன்டர்போல்) நடவடிக்கையில் கிட்டத்தட்ட 30,000 உயிருள்ள விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
ஒன்பது ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் ‘ஆபரேஷன் தண்டர்’ அதிரடி நடவடிக்கையில் இந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை ஆக அதிகமானது என்று சிங்கப்பூரில் அலுவலகத்தைக் கொண்டிருக்கும் இன்டர்போல் வியாழக்கிழமை (டிசம்பர் 11) கூறியது.
சட்டவிரோதமாக தாவரங்கள், விலங்கினங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் அந்த நடவடிக்கையில் 134 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர். சாதனை அளவாக 4,620 பாதுகாக்கப்பட்ட விலங்குகள், தாவரங்கள், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.
2024 நடவடிக்கையில் மொத்தம் 20,000 விலங்குகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சட்டவிரோத வணிகம் பெரும்பாலும் அரிய செல்லப்பிராணி தேவையால் இயக்கப்படுகிறது என்று இன்டர்போல் கூறியது.
மொத்தம், 1,100 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். 10,000 டன்னுக்கும் அதிகமான உயிருள்ள தாவரங்களும் தாவரப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 14,000 மரக் கட்டைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டது தெரியவந்தது. இது உலக மர வணிகத்தில் 15 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரியவகை பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களும் கடத்தப்படுவது இந்த நடவடிக்கையில் தெரியவந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட கிட்டத்தட்ட 10,500 வண்ணத்துப்பூச்சிகள், சிலந்திகள், பூச்சிகள் கைப்பற்றப்பட்டன.
வனவிலங்கு குற்றங்களின் ஆண்டு மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர் (S$25.9 பில்லியன்) ஆக கணிக்கப்பட்டுள்ளது, எனினும், இந்த வணிகத்தின் ரகசியத் தன்மை காரணமாக உண்மையான மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அது கூறியது.
காட்டு விலங்கு இறைச்சியின் சட்டவிரோத வணிகம் அதிகரித்து வருவதை இவ்வாண்டு நடவடிக்கை வெளிப்படுத்தியது. கென்யாவில் பிடிபட்ட 400 கிலோவிற்கும் அதிகமான ஒட்டகச்சிவிங்கி இறைச்சி, டான்சானியாவில் பிடிபட்ட வரிக்குதிரை, கலைமான் இறைச்சி, தோல்கள் உட்பட உலகளவில் 5.8 டன் ஆப்பிரிக்கக் காட்டுவிலங்கு இறைச்சி கைப்பற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“சட்டவிரோத வனவிலங்கு, வனவியல் வணிகத்தை இயக்கும் குற்றவியல் கட்டமைப்பின் அதிநவீன முறையையும் அளவையும் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. போதைப் பொருள் கடத்தல் முதல் மனித சுரண்டல் வரை அனைத்து குற்றச் செயல்களுடனும் இந்தக் கட்டமைப்பு பின்னிப்பிணைந்துள்ளது,” என்று இன்டர்போல் அமைப்பின் பொதுச் செயலாளர் வால்டெசி உர்குய்சா கூறியுள்ளார்.
அனைத்துலக கண்காணிப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத செயல்பாட்டின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை உடைக்கவும் பூமியின் இயற்கை மற்றும் மனித மரபுடைமையைப் பாதுகாக்கவும் இன்டர்போல் கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

