லூக் (உண்மைப் பெயரல்ல) என்னும் ஆடவர் தம்மை ஒரு பெண்ணுடனும் குழந்தை ஒன்றுடனும் இணைத்து வெளியிடப்பட்ட படங்களின் தொடர்பிலான கட்டுரை ஒன்றை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
2025 டிசம்பரில், திருமணமாகாத நிர்வாக உதவியாளரான லூக்கிடம் தம்மை அவரது வருங்கால மனைவி எனக் கூறிக்கொள்ளும் ஒரு பெண்ணுடனும் அவர்களுக்குப் பிறந்ததாகக் கூறப்படும் குழந்தையுடனும் அவர் இருக்கும் புகைப்படங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண் பகிர்ந்த படங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவைபோல் இருப்பதாக லூக்கும் அவரது சகோதரியும் கூறினர்.
அந்தப் பதிவுக்குப் பிறகு தமக்குத் தூங்குவதிலும் வேலையில் கவனம் செலுத்துவதிலும் சிரமம் இருப்பதாக லூக் தெரிவித்தார்.
முதல் படங்களைப் பார்த்த சில வாரங்களுக்குப் பிறகுதான், அந்தப் பெண் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாகப் பார்த்த தமது முன்னாள் பள்ளித் தோழி என்பதை அவர் உணர்ந்தார்.
“நாங்கள் பள்ளியில் படித்தபோது அவளிடம் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசியதில்லை. அவளைப் பார்த்த அல்லது அவளுடன் பழகிய மிகச் சில நேரங்களில், அவளால் இப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியாது,” என்றார் அவர்.
அவருக்கு நேர்ந்த சம்பவத்தின் தொடர்பில் கருத்துக் கூறிய மருத்துவ உளவியல் கரோல் பால்ஹெட்செட், அந்தப் பெண்ணின் செயல் மாயத்தோற்ற சிந்தனையின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் உளவியல் உதவியை அவர் நாட வேண்டும் என்றும் கூறினார்.
படங்கள் வெளியான பிறகு, லூக்கும் அவரது சகோதரியும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களது சமூக ஊடகக் கணக்குகளை ‘பிரைவேட்’ என மாற்றியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாறு போலியாகப் புனையப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளால் பாதிக்கப்படுவோர் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (POHA) உத்தரவு பெறுமாறு வழக்கறிஞர்கள் பரிந்துரைப்பதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கட்டுரை தெரிவிக்கிறது.
அதற்கான நடைமுறை குறித்து ‘குளோரியா ஜேம்ஸ்-சிவெட்டா அண்ட் கோ’ என்னும் சட்ட நிறுவனத்தின் குற்றவியல் பிரிவுத் தலைவரான வழக்கறிஞர் கெவின் லியூ விளக்கியுள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களைப் பதிவிடுதல், ஆள்மாறாட்டம் செய்தல், தவறான இணையப் பதிவுகள் போன்ற செயல்களை அது உள்ளடக்கும்,” என்றார் அவர்.
குற்றவாளி துன்புறுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பதை எப்போதும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று லியூ கூறினார்.
“துன்புறுத்தல், அச்சம் அல்லது மன உளைச்சலை அந்த நடத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே போதுமானது,” என்றார் அவர்.

