மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ஆர்வத்தைத் தூண்டும் சிறுகுகை

2 mins read
69cefe2b-cbbf-41df-a28e-d0abec3ce34e
இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஆர்வத்தைத் தூண்டும் புதிய சிறுகுகை, சிங்கப்பூரின் ஆகப் பெரிய உள்ளரங்கு விளையாட்டுத் திடல் என்று கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிகளில் தேர்வுகள் முடிவுற்று விடுமுறைக் காலத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் மாணவர்கள். பல குடும்பங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம் இது.

பிள்ளைகளில் ஒருசிலர் வனவிலங்குகளைப் பார்க்க ஆவலோடு இருக்கலாம். வேறுசிலர் கேளிக்கைச் சித்திரங்களிலும் திரைப்படங்களிலும் வரும் அவர்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களைக் காண எண்ணியிருக்கலாம். அப்படிப்பட்ட துடிப்போடு, பிள்ளைகளாக இருந்தாலும் பெற்றோராக இருந்தாலும் அனைவருக்குமே ஏதாவது ஒன்று காத்திருக்கிறது.

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ஆர்வத்தைத் தூண்டும் சிறுகுகை

கடலடி உலகத்தைப் பிள்ளைகளோடு கண்டுகளிக்கலாம். நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. முக்குளிப்புச் சாதனமும் தேவையில்லை. ஆப்பிரிக்க சவானா புல்வெளிக்குக்கும் போகலாம். உணவு, நீர், உறைவிடம் குறைவாக உள்ள வறண்ட பகுதியில் விலங்குகள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

இவற்றுக்காக வெளிநாடுகளுக்குப் போகவேண்டியிருக்குமே என்று தோன்றினால், அதற்கு அவசியமில்லை. சிங்கப்பூரைவிட்டு நீங்கள் எங்கும் செல்லவேண்டியதில்லை.

‘கியூரியாசிட்டி கோவ்’ எனும் ஆர்வத்தைத் தூண்டும் சிறுகுகையின் சிறப்பம்சங்களில் அவையும் அடங்கும். இயற்கையை அடிப்படையாகக் கொண்ட அது சிங்கப்பூரின் ஆகப் பெரிய உள்ளரங்கு விளையாட்டுத் திடல்.

4,600 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அது, வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தொடங்கப்படவுள்ளது. சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்துக்கு அருகே மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் அது அமைந்துள்ளது.

மூன்று முதல் 12 வயது வரையிலான பிள்ளைகளுக்காக நான்கு சிறப்பு வட்டாரங்கள் இருக்கின்றன. கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள சூழலில் வனவிலங்குகளைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள ஒவ்வொன்றிலும் வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகள் ஏறவும் தவழவும் தொட்டுணரவும் ஆராயவும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

முதலில் வனப்பகுதி வட்டாரம். தென்கிழக்காசிய மழைக்காடுகளின் அடிப்படையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அங்கு மனிதக்குரங்கு உறங்குவதற்கான பல அடுக்குகளைக் கொண்ட தளமொன்று ஆறு மீட்டர் உயரத்தில் உள்ளது. கிளைகளையும் இலைகளையும் கொண்ட படுக்கைகளை உருவாக்கிப் பிள்ளைகள் மகிழலாம்.

‘பாடும் மரம்’ ஒன்று உள்ளது. அதில் தொங்கும் கொடிகளை அவர்கள் அசைத்துப் பார்க்கலாம். மழைக்காடுகளில் வசிக்கும் விலங்குகளின் பல்வேறு ஒலிகளைக் கேட்கலாம்.

ஈரநில வட்டாரத்தில் பவளப்பாறைகளைப் பிள்ளைகள் தொட்டுப் பார்க்கலாம். பல்லூடக அனுபவத்தையும் அவர்கள் அங்குப் பெறலாம். ஆற்றோரப் பகுதியைக் காணலாம். அத்துடன் அனைத்து உயிரினங்களுக்கும் நீர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதைப் பிள்ளைகள் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த வட்டாரம் புல்வெளி. அங்கு மலைப்பாங்கான பகுதிகளும் நெடிதுயர்ந்த புற்களும் உள்ளன. ஆப்பிரிக்க சவானா புல்வெளியைக் கண்முன் கொண்டுவரும் பகுதி அது.

இறுதியாக உலர்நில வட்டாரம். அது பிள்ளைகளைப் பாலைவனப் பகுதிக்கு இட்டுச் செல்லும்.

இவற்றோடு இன்னும் பல அம்சங்களும் இருக்கின்றன. ஆர்வத்தைத் தூண்டும் சிறுகுகை, புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் உள்ளரங்குக் கவர்ச்சித்தலங்களுக்கான துணை உதவித் தலைவர் ‌ஷர்லி சூ கூறினார்.

“விலங்குகளைக் காணப் பிள்ளைகள் வெளிப்புறத்திற்குச் செல்லும் முன்னர், அந்தச் சிறுகுகையை தொடக்கமாகப் பார்க்கிறோம்,” என்றார் அவர்.

மேல்விவரங்களுக்கு நாடவேண்டிய இணையத்தள முகவரி: mandai.com/curiositycove

குறிப்புச் சொற்கள்