சிங்கப்பூரின் போக்குவரத்துக் காவல்துறை, சாலை விதிமீறல்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அது, அபராதங்களையும் ஆணைகளையும் இன்னும் விரைவாக வழங்க காவல்துறைக்குக் கைகொடுக்கும்.
தற்போதைய நிலவரப்படி, போக்குவரத்து விதிகள் மீறப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 3,000 காணொளிகளைப் போக்குவரத்துக் காவல்துறைக்குப் பொதுமக்கள் அனுப்பிவைக்கின்றனர்.
மோசமடையும் சாலைப் போக்குவரத்து நிலவரத்தால் கூடுதல் காணொளிகள் அனுப்பப்படுகின்றன.
அத்தகைய காணொளிகளை ஆராய ‘டிரேசர்’ எனும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் அது செயல்படுவதாக இரண்டாம் உள்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
‘ஹோம் டீம்’ கழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெற்ற இவ்வாண்டுக்கான காவல்துறை வேலைத் திட்ட மாநாட்டில் திரு டோங் பேசினார்.
மனிதவளப் பற்றாக்குறைக்கு இடையே அச்சுறுத்துல்களை எதிர்கொள்ள சிங்கப்பூர்க் காவல்துறைக்குத் தொழில்நுட்பத்தின் உதவி அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் அடிப்படையில், கட்டங்கட்டமாக அறிமுகம் செய்யப்படும் ‘டிரேசர்’ கருவியால் பொதுமக்கள் அனுப்பும் காணொளிகளில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை மிகவும் எளிமையாகவும் துல்லியமாகவும் கண்டறிய முடியும்.
பொதுமக்கள் அனுப்பும் காணொளிகளைக் கிட்டத்தட்ட 10 அதிகாரிகள் 60 மணி நேரத்துக்கு ஆராயும் சூழல் நிலவுகிறது என்று விளக்கம் அளித்த திரு டோங், பல காணொளிகளைப் பார்வையிட நேரம் பிடிப்பதாகக் கூறினார்.
சாலையில் உள்ள இரண்டு வெள்ளைக் கோடுகளைத் தாண்டுவது, சாலைத் தடுப்புகளுக்குக் குறுக்கே வாகனம் ஓட்டுவது, விரைவுச் சாலைகளில் நடுக்கோட்டில் வாகனம் ஓட்டுவது, பாதசாரிகளுக்கு வழிவிடாமல் இருப்பது போன்ற பல்வேறு விதிமுறைகளை ‘டிரேசர்’ கருவியால் எளிதில் கண்டறிய முடியும்.
‘டிரேசர்’ கருவி மூலம் காணொளியை முழுமையாகக் காணாமல் விதிகள் மீறப்பட்ட குறிப்பிட்ட பகுதியை மட்டும் அதிகாரிகளால் பார்வையிட முடியும்.
இதற்கிடையே, ‘ஹோம் டீம் ஸ்கைகார்டியன்’ (Home Team SkyGuardian) என்ற ஆளில்லா வானூர்திகளையும் ஆளில்லா வானூர்திப் பெட்டிக் கட்டமைப்பையும் திரு டோங் அறிமுகம் செய்தார்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு அந்த ஆளில்லா வானூர்திகள் உதவும். முதற்கட்டமாக, துவாஸ், பிரானி ஆகிய வட்டாரங்களில் 40 கிலோ எடையுள்ள 8 ஆளில்லா வானூர்திகள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

