சட்டவிரோதக் கும்பல்களுடன் தொடர்பு: 30 பேர் மீது நடவடிக்கை

சட்டவிரோதக் கும்பல்களுடன் தொடர்பு: 30 பேர் மீது நடவடிக்கை

1 mins read
0511a968-e2dd-42c0-aa84-77bf7fe436f9
சிங்கப்பூர் காவல்துறை சந்தேக நபர்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரைக் குறிப்புகளையும் விடுத்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இரண்டு சட்டவிரோதக் கும்பல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 30 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வியாழக்கிழமை (மார்ச் 19) தெரிவித்தது.

சந்தேக நபர்களில் 24 பேர் ஆண்கள், அறுவர் பெண்கள். 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமய நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்த இரண்டு சட்டவிரோதக் கும்பல்களுடன் அவர்களுக்குத் தொடர்பிருந்ததாக நம்பப்படுகிறது.

வெளிநாட்டுக் குழுக்களுடன் தொடர்புடைய 25 வெளிநாட்டவர் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்ட இரு கும்பல்களும், கும்பல் ஒழிப்புச் சட்டம் 1966ன்கீழ் தங்களைப் பதிவுசெய்துகொள்ளாமல் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதனால் அவை சட்டவிரோதக் கும்பல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோதக் கும்பல்களில் உறுப்பினர்களாக இருந்ததற்காக சந்தேக நபர்களில் 12 ஆண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

43லிருந்து 56 வயதுக்கு உட்பட்ட அவர்களுக்கு இம்மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரைப்பட்ட காலத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சட்டவிரோதக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்ததற்காக மேலும் 12 ஆண்களுக்கும் ஆறு பெண்களுக்கும் அறிவுரைக் குறிப்புகள் வழங்கப்பட்டன.

அந்த ஆண்கள் 21 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், 30க்கும் 53 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்