ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனக் கடையில் செப்டம்பர் 20ஆம் தேதி, வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே புதிய ஐஃபோன் 16 விற்பனை தொடங்கியுள்ளது.
காலை 6.10 மணிக்கு கடை வாசலில் கிட்டத்தட்ட 110 பேர் வரிசையில் நின்றிருந்த நிலையில், காலை 8 மணிக்கு முதல் வாடிக்கையாளர் கடைக்குள் சென்றார்.
காலை 8.30 மணியளவில் ஏறக்குறைய 300 பேர் வரிசையில் காத்திருந்தனர்.
ஐஃபோன் 16, செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இத்தகைய முதல் திறன்பேசி இது.
செப்டம்பர் 13ஆம் தேதி, வாடிக்கையாளர்கள் ஐஃபோர்ன் 16க்கான முன்பதிவைத் தொடங்கினர்.
செப்டம்பர் 19ஆம் தேதி இரவிலிருந்தே அவர்கள் கடை வாசலில் கூடத் தொடங்கினர். பின்னர் கடை ஊழியர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கூடினர்.
வரிசையில் முதலில் நின்றிருந்த 22 வயது ஹேரால்ட் லிம், ஐஃபோன் வாங்குவதற்காகத் தான் வரிசையில் காத்திருப்பது இதுவே முதல்முறை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். அதிகாலை 3 மணிக்குக் கடை வாசலுக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னைய ஐஃபோன் திறன்பேசிகளைப் போலவே இம்முறையும் மறுவிற்பனையும் சூடுபிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இணைய வர்த்தகத் தளமான ‘கேரோசலில்’ காலை 8.20 மணியளவில் நூற்றுக்கணக்கானோர் ஐஃபோன் 16ஐ மறுவிற்பனை செய்யப் பதிவிட்டுள்ளனர்.
128 கிகாபைட் கொண்ட ஐஃபோன் 16ன் விலை S$1,299. 256 கிகாபைட் ரகத் திறன்பேசியின் விலை S$1,449. 512 கிகாபைட் ரகக் கைப்பேசியின் விலை S$1,749.
ஒவ்வொரு பிரிவிலும் ஐஃபோன் 16 பிளஸ் ரகக் கைப்பேசியின் விலை $100 கூடுதலாக இருக்கும். பிளஸ் வகைக் கைப்பேசி பெரிய திரையுடன் கூடுதல் மின்கலத் திறனையும் கொண்டிருக்கும்.