மத்திய கிழக்குப் பூசலால் அதிகரித்த எண்ணெய் விலையைச் சிங்கப்பூர் சமாளித்துவரும் நிலையில் மற்றொரு பொருளியல் நெருக்கடியை நாடு சந்திக்க நேர்ந்துள்ளது.
அளவுக்கு அதிகமான உற்பத்தி, வலுக்கட்டாய வேலைப் பழக்கங்கள் ஆகியவற்றின் சந்தேகத்தின் பேரில் அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அளவுக்கு மீறிய உற்பத்திக்கு எதிரான சட்டத்தின்கீழ் குறிப்பிட்ட சில பொருள்கள்மீது டிரம்ப் நிர்வாகம் 100 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமான வரிகளை விதிக்க முடியும்.
அந்த வகையில் இம்மாதம் 11ஆம் தேதி அளவுக்கு மீறி உற்பத்தி செய்வதாக அமெரிக்கா 16 வர்த்தகப் பங்காளிகள்மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதில் சிங்கப்பூரும் ஒன்று.
இம்மாதம் 12ஆம் தேதி, வலுக்காட்டாய வேலைப் பழக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று நம்பப்படும் 60 நாடுகள்மீது அமெரிக்கா மற்றொரு விசாரணையைத் தொடங்கியது. சிங்கப்பூரும் அதில் அடங்கும்.
விசாரணையின் முடிவுகள் வெளிவர எப்படியும் பல மாதங்கள் பிடிக்கும் என்பதால் உடனடி பாதிப்புகள் இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜூலை மாதத்துக்குள் வர்த்தக விசாரணைகள் முடிவடையக்கூடும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய கிழக்குப் பூசலால் எரிசக்தி விலை அதிகரிப்பு எவ்வளவு நாள்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. எனவே, ஈரான் போர், அமெரிக்க வர்த்தக விசாரணைகள் ஆகிய இரண்டும் சிங்கப்பூரின் பொருளியலை வெகுவாகப் பாதிக்கக்கூடும் என்றும் பொருளியல் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 100 டாலர் என தொடர்ந்தால் எரிசக்தி விலைகள் உணவுத் துறையிலிருந்து மின்னியல் பொருள் உற்பத்தித் துறை வரை உயரக்கூடும். அதன் விளைவாக வர்த்தகங்களும் மக்களும் உலக அளவில் செலவுகளைச் சுருக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்போது பொருளியலை அது பாதிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
அதனால் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூரின் பொருளியல் பலத்த அடி வாங்கும். வர்த்தக, தொழில் அமைச்சு இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 2 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைத்திருப்பதும் பாதிக்கப்படலாம்.
இருப்பினும், சிங்கப்பூர் அதன் வர்த்தகத் தரவுகளை அமெரிக்காவிடம் சமர்ப்பித்துள்ளது என்றும் விளக்கங்கள் தரக் கேட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

