சிங்கப்பூரின் முதல் இஸ்லாமியக் கல்லூரி, இஸ்லாமிய சமூகத்தினரிடையே இருக்கும் மற்ற தேவைகளைக் கருத்தில்கொள்ளாமல் அமைக்கப்படாது; அக்கல்லூரியை அமைக்க ஸாக்காட், எம்பிஎம்எஃப் போன்ற நிதிகள் அதற்குப் பயன்படுத்தப்பட்டாலும் அந்நிலை உருவாகாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்சிஐஎஸ் இஸ்லாமியக் கல்லூரி
பள்ளிவாசல்கள், மதராசா எனப்படும் இஸ்லாமிய சமயப் பள்ளிகள், சமயக் கல்வி, குறைந்த வருமானக் குடும்பங்கள் ஆகியவற்றின் தேவைகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டபடி எஸ்சிஐஎஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்விக் கல்லூரிக்கு முயிஸ் ஆதரவளிக்கும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறியுள்ளார். எஸ்சிஐஎஸ் 2028ஆம் ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும்.
“எஸ்சிஐஎஸ் நமது வருங்காலத்துக்கான முக்கிய முதலீடாகும். அதேவேளை, அது இப்பொறுப்புகளை பலிவாங்கக்கூடாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சட்ட நிர்வாகச் சட்டத்தில் (Administration of Muslim Law Act) பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது அவர் பேசினார். எஸ்சிஐஎஸ் கல்லூரியை நிர்வகிப்பது, திருமணம் மற்றும் மணவிலக்கு போன்றவற்றின் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒருமித்தமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முயிஸ், இஸ்லாமியக் கல்லூரிக்கு சமமின்றித் தொகையை ஒதுக்காது என்றும் திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட், செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் முகைமின் அப்துல் மாலிக் உள்ளிட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்சிஐஎசுக்கு எவ்வாறு சமூக நிதி ஒதுக்கப்படும் என்று கேள்வி எழுப்பினர். அதற்காக பெறப்படும் தொகைக்கு உச்சவரம்பு இருக்குமா, அது எப்படி கணக்கிடப்படும் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
எஸ்சிஐஎசுக்கான சமூக நிதி, இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்றவாறும் ஒதுக்கப்பட்ட காரணங்களுக்கு ஏற்றவாறும் பயன்படுத்தப்படும் என்று திரு ஸாக்கி விளக்கமளித்தார். எம்பிஎம்எஃப் நிதி தொடர்ந்து பள்ளிவாசல்கள், சமயக் கல்வி, மெண்டாக்கி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் என்றும் முயிஸ் வழங்கும் சமூக நிதியின் விவரங்கள் அதன் ஆண்டு அறிக்கையிலும் நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும் நிதி அறிக்கைகளிலும் குறிப்பிடப்படும் என்று அவர் விவரித்தார்.
எஸ்சிஐஎஸ் முதலில் 60 மாணவர்களுடன் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு ஆண்டுதோறும் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கட்டங்கட்டமாக 120க்கு உயர்த்தப்படும்.
