தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர்க் குற்றம்: முன்னாள் இஸ்ரேல் பிரதமரின் கருத்துடன் உடன்படும் அமைச்சர் ஃபைஷால்

2 mins read
0acd2e1d-b4d0-4ce4-a807-16c568fef00b
காஸாவிற்கு மனிதநேய உதவிப்பொருள்கள் விநியோகத்திற்கு இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தகாதவை என்று அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் சாடியுள்ளார். - படம்: பெரித்தா ஹரியான்

காஸாவில் இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது என்ற அந்நாட்டின் முன்னாள் பிரதமர் எகுத் ஓல்மர்ட்டின் கருத்துடன் தாம் உடன்படுவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரின் தொடக்க ஆண்டுகளில் இஸ்ரேல் ஆற்றிய பங்களிப்புகளை நினைக்கும்போது, இதனைச் சொல்வது வலி தருவதாக உள்ளது. ஆயினும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். நான் உட்பட, திரு எகுத்தின் கருத்துகளுக்கு உடன்படுவோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரிக்கும் என அஞ்சுகிறேன்,” என்றார் பேராசிரியர் ஃபைஷால்.

ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை (மே 31) சாங்கி விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்குக் கிளம்பிய 44 பேரை வழியனுப்பும் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.

கடந்த 2006 முதல் 2009 வரை இஸ்ரேலின் 12வது பிரதமராகப் பதவி விகுத்த திரு எகுத், காஸாவில் இஸ்ரேல் போர்க் குற்றங்களில் ஈடுபடுகிறது என்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியப் போர்வீரர்களும் கொல்லப்படுகின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.

‘ஹாரெட்ஸ்’ எனும் இஸ்ரேலிய நாளிதழுக்காகவும் இணையத்தளத்திற்காகவும் அவர் எழுதியிருந்த கட்டுரையை மே 27ஆம் தேதி ‘தி கார்டியன்’ வெளியிட்டிருந்தது.

எந்த நோக்கமும் இலக்கும் தெளிவான திட்டமிடலும் இல்லாமல், வெல்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதாகவும் திரு எகுத் சாடியுள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் அனைத்துலக மனிதநேயச் சட்டத்தை மீறியிருக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் நம்புகிறது என்று உள்துறை மூத்த துணை அமைச்சருமான பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.

முன்னதாக, இஸ்ரேல் தன்னைத் தற்காக்கும் உரிமையைக் கொண்டிருந்தாலும் காஸாவில் அதனுடைய நடவடிக்கை அதிகப்படியானது என்றும் அதனுடைய செயல்கள் படுமோசமான மனிதநேயப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமையன்று கூறியிருந்தார்.

அதனைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஃபைஷால், “குறிப்பாக, காஸாவிற்கு மனிதநேய உதவிப்பொருள்கள் விநியோகத்திற்கு இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தகாதவை,” எனக் குறிப்பிட்டார்.

இரண்டு மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, மார்ச் 2ஆம் தேதியிலிருந்து காஸாவிற்கு உதவிப்பொருள்களும் வணிகப் பொருள்களும் செல்வதை இஸ்ரேல் கிட்டத்தட்ட முழுவதுமாகத் தடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்