சிங்கப்பூர் அதிபரின் அதிகாரபூர்வ தங்குமிடமான இஸ்தானா, ஓர் ஆண்டில் ஐந்து முக்கிய விழாக்களை முன்னிட்டு பொதுமக்களுக்குக் குறிப்பிட்ட நாள்களில் திறந்துவிடப்படுவது வழக்கம்.
அதில் சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தொழிலாளர் தினம், தேசிய தினம், தீபாவளி ஆகிய முக்கியக் கொண்டாட்டங்கள் அடங்கும்.
நவம்பர் 8ஆம் தேதி தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1ஆம் தேதி) பொதுமக்கள் பார்வைக்காக அது திறந்துவிடப்படுகிறது.
அன்றைய தினம் அங்கு நடக்கும் வாயிற்காவலர்கள் மாற்றப்படும் நிகழ்வு முதன்முறையாக நெறியாளரால் தொகுத்து வழங்கப்படவுள்ளது.
அதன் விவரங்களை அதிபர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) வெளியிட்டது. ராணுவப் பாரம்பரியத்தின்படி, வாயிற்காவலர்கள் பொறுப்புகளைப் பணி மாற்றிக்கொள்ளும் செயல்முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பணியில் இருந்த அதிகாரி, குறிப்பிட்ட நேரத்தில் அடுத்த அதிகாரியிடம் பொறுப்பை விட்டுச் செல்வதும், அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரி பணியைத் தொடர்வதும் அன்றாடும் நடக்கும் ஒன்று என்றாலும் மாதம் ஒருமுறை பொதுமக்கள் திரண்டு அந்தச் சடங்கைப் பார்வையிடும் விதமாக அது இஸ்தானாவில் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அந்த அதிகாரபூர்வ நிகழ்வு மாலை 6 மணிக்கு இஸ்தானாவில் நடைபெறும்.
அந்த நிகழ்வோடு, சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் வாத்தியக் குழுவின் இசை நிகழ்ச்சி, ராணுவப் படையின் துல்லிய நடை அணிவகுப்புப் பிரிவின் ஓசையற்ற பாவனைப் பயிற்சி, மாலை நேர ஆடல்பாடல், கலாசார நிகழ்வுகள் போன்ற பல சிறப்பு ஏற்பாடுகள் வரும் ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றோடு, அற நடவடிக்கைகளுக்கு உதவும் சமூகச் சந்தை ஒன்றும் பொதுமக்கள் பொருள்கள் வாங்கிச் செல்ல அமைக்கப்படும். அதனை சிங்கப்பூர் வர்த்தகர்கள் அமைப்பின் அறநிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
கலை நிகழ்ச்சிகளில், உள்ளூர் பாடலாசிரியரும் பாடகருமான அகமதுல் அமின், ஹீமா இசாட்டி, ஆகியோருடன் புரோஜெக்ட் ஜாலான் ஜாலான், எக்ஸ்டிராஓடினரி பீப்பள், மைக்ரோன், குவான்டெஜ் போன்ற பிரபல இன்னிசைக் குழுக்களும் பங்கேற்கவுள்ளன.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் டிக்கிர் பாராட், மலாய் நடனங்கள் போன்ற பாரம்பரிய கலை அம்சங்களை வழங்கவுள்ளனர்.
