எரிசக்தி, தண்ணீர், போக்குவரத்து போன்ற முக்கியச் சேவைகளை வழங்கும் அமைப்புகள், மேம்பட்ட இணையத் தாக்குதல் குறித்த மிரட்டல்கள் தொடர்வதாகச் சந்தேகித்தால் அதுபற்றிப் புகாரளிப்பது இனி கட்டாயமாக்கப்படும்.
சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் இணையப் பாதுகாப்பு அமைப்பிடம் இவ்வாறு புகாரளிப்பதைக் கட்டாயமாக்கும் நடைமுறை இந்த ஆண்டுப் (2025) பிற்பாதியில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தெரிவித்தார்.
ஜூலை 18ஆம் தேதி, சிங்கப்பூரின் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பின்மீது வெளிநாட்டு அரசு ஆதரவு பெற்ற இணையப் பாதுகாப்பு உளவுக் குழுவான UNC3886 நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதலை அதிகாரிகள் கையாண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தத்தின்கீழ் புகாரளிப்பதைக் கட்டாயமாக்கும் நடைமுறை நடப்புக்கு வரவிருக்கிறது.
சிங்கப்பூரின் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மேம்பட்ட தொடர்ச்சியான மிரட்டல் (APT) விடுக்கும் சில குழுக்களில் UNC3886 குழுவும் அடங்கும் என்றும் 2021க்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையே அதன் நடவடிக்கைகள் நான்கு மடங்குக்குமேல் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தால் அமைப்புகள் தனிப்பட்ட முறையில் அந்தத் தாக்குதல்காரர்களைக் கையாளக்கூடாது என்றார் திருமதி டியோ.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த செயல்பாட்டுத் தொழில்நுட்பத்திற்கான இணையப் பாதுகாப்பு வல்லுநர் குழுவின் ஐந்தாவது வருடாந்தரக் கருத்தரங்கில் அமைச்சர் உரையாற்றினார்.
புகாரளிப்பதைக் கட்டாயமாக்குவது போன்ற விதிமுறைகள், மேம்பட்ட தொடர்ச்சியான மிரட்டல் நடவடிக்கைகளை முளையிலேயே கண்டறிய உதவும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்தின் இதர அமைப்புகளுடன் இணைந்து இணையப் பாதுகாப்பு அமைப்பு சரியான நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு, முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தற்காக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேம்பட்ட தொடர்ச்சியான மிரட்டல் குழுக்கள் பெரும்பாலும் அரசாங்க ஆதரவு பெற்றவை என்பதால் அவற்றிடம் அதிகமான வளங்கள் இருக்கும். அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்கவும் அதிமுக்கிய கட்டமைப்புகளில் பதுங்கியிருக்கவும் முடியும். அதன்வழி, நீண்டகால அடிப்படையில் முக்கியத் தகவல்களைத் திருடவோ அத்தியாவசியச் சேவைகளில் இடையூறு ஏற்படுத்தவோ அவற்றால் இயலும்.
விமானப் போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு, நிலப் போக்குவரத்து, கடல்துறை, ஊடகத்துறை, பாதுகாப்பு, அவசரகாலச் சேவைகள், தண்ணீர், வங்கி, நிதித் துறை, எரிசக்தி, தகவல்தொடர்பு, அரசாங்கம் ஆகியவை சிங்கப்பூரின் முக்கிய உள்கட்டமைப்புகளாகும்.

