‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் சிங்கப்பூர் அழகி பங்கேற்கமாட்டார் எனத் தகவல்

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் சிங்கப்பூர் அழகி பங்கேற்கமாட்டார் எனத் தகவல்

படம்: ஹைப்பர்லைவ் என்டர்டெய்ன்மென்ட்

22 Oct 2026 - 8:07 pm

2 mins read

அமெரிக்கத் தன்னாட்சிப் பகுதியான புவெர்ட்டோ ரிக்கோவில் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகிப் (மிஸ் யுனிவர்ஸ்) போட்டியில் சிங்கப்பூர் அழகி வயோன் எரிக்கோ டான் பங்கேற்கமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.

தாய்லாந்து, வியட்னாம், இந்தோனீசியா, மலேசியா, லாவோஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இணைந்து, இந்தப் போட்டியில் பங்கேற்காத ஆறு அழகிகளில் இவரும் ஒருவர்.

தாய்லாந்து அழகிப் போட்டி இயக்குநர் நவாத் இத்சாராகிரிசில் தலைமையிலான ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்’ அமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 22) இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்புகள், தேசிய அமைப்புகள் மற்றும் ஆறு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

அந்த ஆறு பிரதிநிதிகளும் தங்கள் சொந்த நாடுகளுக்குள் தங்களுடைய தேசியப் பட்டங்களைத் தொடர்ந்து வைத்திருப்பதுடன், அதற்கான பொறுப்புகளையும் நிறைவேற்றுவர் என்று அறிக்கை மேலும் கூறியது.

ஆனால், இந்தச் செய்தியை தற்போதுதான் அறிந்ததாகவும் அது தம்மைப் பாதித்துள்ளதாகவும் சிங்கப்பூர் அழகியான திருவாட்டி டான் வியாழக்கிழமை தமது இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.

“உண்மையைச் சொல்லவேண்டுமெனில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இது என்னை மிகவும் பாதித்துள்ளது.

“அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து மேலும் பகிர்ந்துகொள்வதற்குமுன், எனது எண்ணங்களைத் திரட்டவும் இதை ஏற்றுக்கொண்டு தெளிவடையவும் எனக்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

“இந்தப் பயணம் என்பது வெறும் மகுடத்தைப் பெறுவதையோ அல்லது ஒரு போட்டியில் பங்கேற்பதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, சிங்கப்பூரின் பெயரை அனைத்துலக அரங்கிற்கு எடுத்துச்செல்லவும் நமது பண்பாடு, கதைகள் மற்றும் பெருங்கனவுகளைக் கொண்ட ஒரு சிறிய தேசத்தின் மனவுறுதியை உலகிற்குப் பகிர்ந்துகொள்ளவும் கிடைத்த வாய்ப்பாகவே இது தோன்றியது,” என்றார் திருவாட்டி டான்.

குறிப்புச் சொற்கள்
உலக அழகிபோட்டிதாய்லாந்து