சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்றில் மூண்ட தீயைத் தொடர்ந்து, அதிலிருந்த பயணி ஒருவர் அந்தச் சம்பவம் மிகப் பயங்கரமான, அதிர்ச்சிதரும் அனுபவம் என்று கூறியுள்ளார்.
அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக குயின் என்ற அந்தப் பயணி கூறினார்.
“அனைவரும் பீதியடைந்தனர்,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அப்போதுதான் அவர்கள் ஏழாம் தளத்திற்குச் செல்லவேண்டும் என்ற அறிவிப்பு வந்ததாகவும் அவர் சொன்னார்.
ஊழியர்கள் அவர்களைக் கவலைப்படவேண்டாம் என்றும் எல்லாம் நன்றாக உள்ளது என்றும் கூறியதாக அவர் தெரிவித்தார்.
‘வோர்ல்டு லெகசி’ எனும் அந்த உல்லாசக் கப்பலில் 271 பயணிகள் இருந்தனர். அவர்களில் 139 பேர் சிங்கப்பூரர்கள்; 388 பேர் ஊழியர்கள்.
தீச்சம்பவம் அதிகாலை 4 மணி அளவில் கப்பலின் ஒன்பதாவது தளத்தில் நேர்ந்தது.
இந்தோனீசியாவைச் சேர்ந்த 23 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
அவர் கப்பலில் துணிகளைச் சலவை செய்பவர் என்று சிங்கப்பூரில் உள்ள இந்தோனீசியத் தூதரகம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஊழியர் கப்பலின் ஒன்பதாவது தளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தீயணைப்பாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறினர்.
மருத்துவ உதவி வழங்கப்பட்டபோதும், காலை 4.30 மணிக்கு அவரது மரணம் உறுதிசெய்யப்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதயம் செயலிழந்ததே மரணத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் என்றும் ஆணையம் கூறியது.
இந்நிலையில், திருவாட்டி குயின் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த காணொளியில், பயணிகள் உயிர்காப்புடை அணிந்திருந்ததைக் காணமுடிந்தது.
“நான்கு மணி நேரமாகக் குளிர், சோர்வு இருந்தது,” என்றார் அவர்.
“புகையை நுகர்ந்ததால் சிலருக்கு மூச்சுவிடச் சிரமமாக இருந்தது,” என்றும் திருவாட்டி குயின் கூறினார்.

