தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ) 2026 கல்வி ஆண்டில் ஏழு புதிய பாடத் திட்டங்களை இணைக்க உள்ளது.
நவீன உற்பத்தி, வான்வெளி பொறியியல், வாகனப் பொறியியல், கடல்துறை மற்றும் கடல்சார் பொறியியல், இயந்திரப் பொறியியல், இயந்திர மின்னணுப் பொறியியல், பெருவிரைவுப் பொறியியல் ஆகியன அந்த ஏழு பாடத்திட்டங்கள்.
இந்தப் பாடத்திட்டங்கள் அனைத்தும் மூன்றாண்டு படிப்புக்குரியவை.
புதியனவற்றையும் சேர்த்தால் உயர் நைட்டெக் பாடத்திட்டங்களின் எண்ணிக்கை 49க்கு உயரும்.
இதனைத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
தனது நைட்டெக் பாடத் திட்டங்கள் அனைத்தும் மூன்றாண்டு உயர்நிலை நைட்டெக் பாடத்திட்டக் கட்டமைப்புக்கு முழுமையாக உருமாறுவதை புதிய பாடத்திட்ட இணைப்பு உணர்த்துவதாக அது அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூன்றாண்டு படிப்பு என்னும் கட்டமைப்பு கடந்த 2022ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
உருமாற்றம் செய்யப்படுவதன் மூலம், மாணவர்கள் தங்களது உயர்நிலைப் படிப்புக்கான சான்றிதழைப் பெறும் காலம் நான்காண்டிலிருந்து மூன்றாண்டாகக் குறையும் என கல்விக் கழகம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர், நைட்டெக் கல்விச் சான்றிதழை ஈராண்டுகளில் மாணவர்கள் பெற்றனர். அவர்களில் சிலர் ஊழியரணிக்குள் நுழைந்துவிட்டபோதிலும் மற்றவர்கள் உயர்நிலை நைட்டெக் படிப்புக்காக மேலும் ஈராண்டுகளைச் செலவிட்டனர்.
உயர்நிலை நைட்டெக் பாடங்களை ஈராண்டுகளில் முடிக்கும் திறன்பெற்ற மாணவர்களையும் கல்விக்கழகம் வரவேற்கிறது.
சாதாரண நிலை (ஓ நிலை) தேர்ச்சிபெற்றவர்களும் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கான நேரடி சேர்க்கைத் திட்டத்தின் வாயிலாக ஐடிஇ-க்குள் நுழையும் மாணவர்களும் புதிய ஏழு பாடத்திட்டங்களுக்கு வரவேற்கப்படுவதாக அது தெரிவித்தது.
அவற்றைப் படிக்க விரும்பும் சாதாரண நிலை மற்றும் வழக்கநிலை (என் நிலை) மாணவர்கள் இணைச் சேர்க்கை நடவடிக்கை வாயிலாக டிசம்பர் 18 மாலை 5 மணிக்குத் தொடங்கி டிசம்பர் 22 பிற்பகல் 2.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
புதிய பாடத் திட்டங்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களை ஐடிஇ இணையத்தளத்தில் பெறலாம்.

