தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வளர்ச்சிக்கான மனப்போக்கு என்றும் அவசியம்: அமைச்சர் இந்திராணி ராஜா

3 mins read
cf8a0867-635a-491f-b845-20c89614c624
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயில்வதன் வழியாக கல்வியில் சிறந்து விளங்குவதை எடுத்துக்கூற ஜூலை 26ஆம் தேதி உரையாடல் நிகழ்வு ஒன்றுக்கு சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) ஏற்பாடு செய்திருந்தது.  - படம்: த.கவி
multi-img1 of 3

கல்வி அனுபவத்தைத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயில்வதன் மூலம் பெறுவதை மாணவர்கள் பெருமையாகக் கருத வேண்டும்.

அது கல்விப் பயணத்தின் முடிவன்று, ஒரு சுவாரசியமான கற்றல் பயணத்தின் தொடக்கம் என்றார் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா. 

தொழில்நுட்பக் கல்விக் கழகப் படிப்புவழி, கல்வியில் சிறந்து விளங்குவதைப் பற்றி எடுத்துக்கூற ஜூலை 26ஆம் தேதி இளையர் கலந்துரையாடல் நிகழ்வுக்கு சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. 

அதில் சிண்டா நிர்வாகக் குழுத் தலைவர் குமாரி இந்திராணி கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். 

தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கு உதவ, சிண்டா பல முயற்சிகளில் இறங்கியுள்ளது. தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கான சிண்டாவின் தனிநபர் வருமானம் (PCI) அளவு 1,000 வெள்ளியிலிருந்து 1,600 வெள்ளியாக அதிகரித்ததைப் பற்றியும் அமைச்சர் இந்திராணி எடுத்துரைத்தார்.

“தனிநபர் வருமானம் தொடர்பான இந்த மாற்றங்களால் மேலும் நிறைய குடும்பங்கள் பலன் அடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர். 

குமாரி இந்திராணியுடன் கலந்துரையாடலில் பேசிய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சிண்டா இளையர்த் துணைக்குழுத் தலைவருமான ஹமித் ரசாக், இக்கால மாணவர்களின் மாறுபட்ட திறன்களைச் சுட்டிப் பாராட்டினார். 

“எந்த ஒரு கல்விப் பயணமும் மாணவர்களுக்கு வாழ்க்கையில் அடுத்த படியாக அமைய வேண்டுமே தவிர ஒரு முடிவாகிவிடக்கூடாது,” என்றார்.

சிண்டாவின் தனிநபர் வருமான ஊக்கத் தொகைத் திட்டத்தைத் தவிர தொழில்நுட்பக் கல்விக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் தன்னம்பிக்கையையும் மீள்திறனையும் வளர்க்கும் ‘ஐடிஇஎனேபல்’ (ITEnable) திட்டமும் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் ஒருவரையொருவர் ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளைப் பற்றி முன்னாள் மாணவர்கள் பகிர்ந்துகொள்ளுதல், மத்திய சேமநிதி வங்கி பற்றிய தகவல்களைத் தெளிவுப்படுத்துதல் என வழிகாட்டும் நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தில் அடங்கும். 

“தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களின் கல்விப் பயணத்தில் முழுமையான ஆதரவை இந்தத் திட்டத்தின் மூலம் அளிக்கிறோம்,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். 

கலந்துரையாடல் நிகழ்வுக்காக மூன்று தொழில்நுட்பக் கல்விக் கழகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 மாணவர்கள், தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய வளாகத்தில் ஒன்றுகூடினர்.  

இந்த உரையாடலில் முன்னாள் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களும் தற்போதைய மாணவர்களும் தங்களுடைய கல்விப் பயணத்தைப் பற்றிப் பேசினர்.

“சிண்டா வழங்கும் தனிநபர் வருமான ஊக்கத் தொகை என் அன்றாடச் செலவுகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது,” என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் அமீர்ஜான் சாஹுல் ஹசான், 18.

சிறுவர் இல்லத்தில் ஒன்பது ஆண்டுகளாக வசித்து வரும் மாணவரான 20 வயது ஜெய ஐஸ்வர்யா ஹுசைன், தம்முடைய பள்ளி ஆசிரியர் மூலம் ‘ஐடிஇஎனேபல்’ திட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டார்.  

“என் சக மாணவர்களுடன் சேர்ந்து இந்த நடவடிக்கைகளில் பங்கேற்பது எனக்குச் சிறந்ததொரு உந்துதலாக உள்ளது. பள்ளிப்படிப்பு முடிந்து எதிர்காலத்தில் என் லட்சியங்களைத் திட்டமிட இந்த ‘ஐடிஇஎனேபல்’ திட்டம் பெரிதும் கைகொடுக்கிறது,” என்றார் அவர்.    

“என்றுமே வளர்ச்சி மனப்போக்கு இருப்பது அவசியம். கற்றலுக்குத் தொடர்ந்து இடங்கொடுங்கள். உங்களுக்கு ஆதரவு என்றும் உள்ளது,” என்று வலியுறுத்திக் கூறினார் அமைச்சர் இந்திராணி.

குறிப்புச் சொற்கள்