சிங்கப்பூர்க் கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆடவருக்கு நான்கு மாதம், ஆறு வாரச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் வெள்ளிக்கிழமை (மே 9) விதிக்கப்பட்டன.
படகைத் தாறுமாறாக ஓட்டியதோடு சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்தை 28 வயது முகமது ரசிடி பின் ஏ ரசாக் ஒப்புக்கொண்டார்.
படகை நிறுத்தும்படி கடலோரக் காவற்படை விதித்த உத்தரவுக்கு இணங்க மறுத்த குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்த ரசிடி ஒரு மாதக் காலம் முழுநேர படகோட்டியாக வேலை செய்துகொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 18ஆம் தேதியன்று மீன்பிடிப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துதரும்படி கியு யுக் ஹுவா, சூரியநாராயணன் சுப்பிரமணியம் ஆகிய இரண்டு ஆடவர்களும் மார்ச் மாதத்தில் ரசிடியிடம் கேட்டனர்.
ஏப்ரல் 18ஆம் தேதி ஆடவர்களைச் சந்தித்த ரசிடி ஜோகூர் படகு முனையத்திலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டார்.
அவர்கள் பிற்பகல் 1 மணி வரை மீன்பிடித்தனர்.
அதையடுத்து சரிம்பான் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் ரசிடி படகைச் செலுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அது சிங்கப்பூரின் வடமேற்குக் கரையோரத்திற்கு அருகில் உள்ளது.
சிங்கப்பூர் கரையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிக்குச் செல்லக்கூடாது என்று தெரிந்திருந்தும் ரசிடி அவ்வாறு செய்ததாக அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொன்னார்.
பிற்பகல் 2 மணியளவில் கண்காணிப்புப் பணியில் இருந்த கடலோரக் காவற்படை அதிகாரி சரிம்பான் தீவின் கரையிலிருந்து சுமார் 1 மீட்டர் தூரத்தில் ரசிடியின் படகைக் கண்டார்.
கடலோரக் காவற்படையின் படகைக் கண்டவுடன் பதறிய ரசிடி மலேசியா நீர்ப்பகுதியை நோக்கி படகை விரைவாகச் செலுத்தினார்.
அதிகாரிகள் துரத்தியபோதும் விடாமல் படகை வேகமாக ரசிடி செலுத்தியதும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அதிகாரிகளின் படகுடன் மோதியதில் ரசிடியின் படகில் இருந்த இரண்டு பயணிகளும் கடலில் வீசப்பட்டனர்.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படக்கூடும்.