வேலைவாய்ப்புகளை எளிய முறையில் அணுக ‘ஜாப்ஸ்@ஸ்டேஷன்’ திட்டம்

பாய லேபார் ரயில் நிலையத்தில் வேலைவாய்ப்பு சேவைகள்

வேலைவாய்ப்புகளை எளிய முறையில் அணுக ‘ஜாப்ஸ்@ஸ்டேஷன்’ திட்டம்

2 mins read
6033c7ed-80d6-410a-9664-bfe7bd13bb95
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சரும், தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ் (இடது) மற்றும் எஸ்எம்ஆர்டி ரயில் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் ஆல்வின் கெக் (வலது) இணைந்து ‘ஜாப்ஸ்@ஸ்டேஷன்’ திட்டத்தை துவக்கி வைத்தனர்.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

வேலைவாய்ப்புகளை குடியிருப்பாளர்களுக்கு எளிய வகையில் கொண்டுசெல்ல ‘ஜாப்ஸ்@ஸ்டேஷன்’ (JOBS@STATION) முன்னோடித் திட்டம் வெள்ளிக்கிழமை (மே 22) பாய லேபார் ரயில் நிலையத்தில் அறிமுகம் கண்டது.

தினமும் பாய லேபார் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் பயணிகளுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனைச் சேவைகளையும், நேரடி பரிந்துரைகளையும் ‘ஜாப்ஸ்@ஸ்டேஷன்’ சாவடி வழங்கும்.

கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சரும், தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ் இத் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் துவக்கி வைத்தார்.

இந்தத் திட்டம் ஆறு மாத காலம் நீடிக்கும் என்றார் திரு தினேஷ்.

“ஆறு மாதத்திற்குப் பிறகு அதிக குடியிருப்பாளர்களை ஈர்ப்பதில் எது சிறந்த வழி என்று மதிப்பீடு செய்யப்படும்,” என்றார்.

கடந்த ஆண்டு ‘அருகாமையில் வேலைகள்’ (Jobs Nearby @ CDC) எனப்படும் சமூக மன்றத்தின் திட்டத்தைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்ததைத் தொடர்ந்து தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் அறிமுகம் செய்யும் முதல் முன்னோடித் திட்டம் இதுவாகும்.

பெற்றோரைப் பார்த்துக் கொள்ள கல்வித்துறையில் தனது பணியிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார் பிரவின் நாராயணசாமி, 37.

தற்போது மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பும் அவர், ‘ஜாப்ஸ்@ஸ்டேஷன்’ திட்டத்தின் உதவியுடன் தனக்குப் பொருத்தமான ஒரு பணியைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்து வருகிறார்.

“எனக்கு வணிகத் திட்டமிடலில் அனுபவம் உண்டு. இந்த மென்திறன்களைப் பயன்படுத்தக்கூடிய ஒரு பணியைக் கண்டறிய விரும்புகிறேன்,” என்று பகிர்ந்தார்.

இவ்வாண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வார நாள்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பாய லேபார் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள ‘ஜாப்ஸ்@ஸ்டேஷன்’ சாவடியை பொதுமக்கள் அணுகலாம்.

குறிப்புச் சொற்கள்