சிங்கப்பூர் ஆகாயப் படையும் (RSAF) இந்திய விமானப் படையும் (IAF) இணைந்து இந்தியாவின் கலைக்குண்டா விமானப்படை நிலையத்தில் மேற்கொண்ட 12வது கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவுபெற்றுள்ளது.
அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சி டிசம்பர் 6ஆம் தேதி நிறைவுபெற்றது.
சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சு டிசம்பர் 6ஆம் தேதி இதைத் தெரிவித்தது.
இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி, இரு நாட்டு ஆகாயப் படைகளையும் சேர்ந்த விமான, தரைத்தளப் பணிக்குழுவினர் தங்கள் செயலாக்கப் போட்டித்தன்மையை மேம்படுத்தி, தற்காப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்பளித்தது. மேல்நிலைப் பயிற்சிகளில் விமானத் தாக்குதல் தொடர்பான பயிற்சியும் அடங்கும்.
நவம்பர் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற இருதரப்புப் பயிற்சிக் கட்டம், இரு நாட்டு ஆகாயப் படைகளுக்கு இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு நடைபெற்றது.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-15-எஸ்ஜி, எஃப்-16 வகைப் போர் விமானங்கள், ஜி550 வகை எச்சரிக்கை விமானம், 300க்கும் மேற்பட்ட ஆகாயப்படை வீரர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர். இந்திய ஆகாயப் படையின் ரஃபேல், எஸ்யு-30எம்கேஐ வகைப் போர் விமானங்களுடன் இணைந்து அவர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-15எஸ்ஜி வகைப் போர் விமானம் முதன்முறையாக இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.