சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் மருந்தியல் பேராசிரியராகச் செயல்பட்டு, ஓய்வுபெற்ற இராம கருணாநிதி, 88, தம்மால் இயன்ற எல்லா விதங்களிலும் சேவையாற்றுவதில் இன்பம் காண்பவர்.
சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இந்து ஆலோசனை சேவையில் தொண்டாற்றிய திரு கருணாநிதி, போதைப்பொருள் உட்கொண்டவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்களின் மேலவை அதிகாரியாகவும் ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்தின் நிர்வாகக் குழுத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.
சிறு கோரிக்கை நடுவர் மன்றங்களில் நடுவராகச் செயல்பட்டு சட்டத்துறையிலும் தம் பங்களிப்பைப் பதித்த திரு கருணாநிதி, அதற்கான பாராட்டையும் பெற்றிருக்கிறார். “நாட்டுக்கு ஏதேனும் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது என் இயல்பு,” என்றார் அவர், குறுநகையுடன்.
இவருடன் மற்றும் பலர், நீதித்துறையில் வெவ்வேறு விதங்களில் ஆற்றிய தொண்டூழியச் சேவைக்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
சிங்கப்பூர் நீதிமன்றங்கள், தங்களது தொண்டூழியர்களைப் பாராட்டும் மதிய உணவு விருந்தைப் புதன்கிழமையன்று (நவம்பர் 27) நடத்தியது.
நிகழ்ச்சியைச் சிறப்பித்த தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், இந்த விருதுகளை வழங்கினார். பன்முகத்தன்மை வாய்ந்த தொண்டூழியர்களின் பங்களிப்பு, நீதித்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு முக்கியமான ஆதரவை அளிப்பதாக நிகழ்ச்சியில் தொடக்க உரை ஆற்றிய திரு மேனன் கூறினார்.
“நீதிமன்றத்தை நாடுவோரில் குறிப்பிடத்தக்க பங்கினர், தங்களைச் சுயமாகப் பிரதிநிதிக்கின்றனர் என்பது இன்றைய உண்மை நிலை. நம் விதிமுறைகளையும் செயல்முறைகளையும் எப்படி வடிவமைக்கிறோம் என்பது குறித்து மறுயோசனை செய்யும் தேவையை இது ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு தொண்டூழியரான, குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ள வழக்கறிஞர் கண்ணன் நடராஜன், 36, சிலருக்கு எந்தத் திசையை நோக்கிச் செல்லவேண்டும் என்ற எளிமையான ஆலோசனை தேவைப்படுவதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“குடும்ப நீதி ஆதரவுத் திட்டத்தின்கீழ் நான் செயல்படுகிறேன். வழக்கமான சட்ட உதவிக்குத் தகுதி பெறாதவர்களுக்கும் சிங்கப்பூரரைத் திருமணம் செய்த வெளிநாட்டவருக்கும் இத்திட்டம் உதவுகிறது.
“ஆலோசகர்களுடனும் குடும்ப ஆதரவுக்கான சமூக ஊழியர்களுடனும் இணைந்து சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு இந்த வகையில் தொண்டூழியம் செய்வது எனக்கு மனநிறைவை அளிக்கிறது,” என்றார் திரு கண்ணன்.