தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலாங் பேசின் நீச்சல் வளாகம், செயின்ட் வில்ஃபிரெட் விளையாட்டு நிலையம் மூடல்

2 mins read
அந்த நிலப்பகுதிகள் பொது வீடமைப்புக்குப் பயன்படுத்தப்படக்கூடும்
f8967332-9196-462c-91a8-d7ebd4d255bd
காலாங் பேசின் நீச்சல் வளாகம் செப்டம்பர் 1ஆம் தேதி மூடப்படும். - படம்: காலாங் பேசின் விளையாட்டு நிலையம்/ஃபேஸ்புக்
multi-img1 of 2

காலாங் பேசின் நீச்சல் வளாகம், செயின்ட் வில்ஃபிரெட் விளையாட்டு நிலையம் இரண்டும் இந்த ஆண்டுப் (2025) பிற்பாதியில் அவற்றின் குத்தகைக் காலம் முடிவடைந்த பிறகு மூடப்படும்.

‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ (SportSG) அமைப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

எண் 21 கேலாங் பாரு லேனில் அமைந்திருக்கும் காலாங் பேசின் நீச்சல் வளாகம் செப்டம்பர் 1ஆம் தேதி மூடப்படும் என்றும் வாம்போ வட்டாரத்தில் அமைந்திருக்கும் செயின்ட் வில்ஃபிரெட் விளையாட்டு நிலையம் அக்டோபர் 1ஆம் தேதி மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

காலாங் பேசின் வளாகத்தில் உடலுறுதிக்கூடம் ஒன்றும் அமைந்துள்ளது. செயின்ட் வில்ஃபிரெட் விளையாட்டு நிலையத்தில் டென்னிஸ், ஸ்குவாஷ் திடல்களும் காற்பந்துத் திடலும் அமைந்துள்ளன.

இரு வளாகங்களும் மூடப்படுவதை அடுத்து, அந்த நிலப்பகுதிகளைப் பொது வீடமைப்புக்காக மறுமேம்பாடு செய்வது குறித்து ஆராயப்படுவதாகக் கூட்டறிக்கை தெரிவித்தது.

அண்மைய ஆண்டுகளில் வலுவடைந்துள்ள வீடமைப்புத் தேவையைச் சமாளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஓர் அங்கம் இது என்று கூட்டறிக்கை குறிப்பிட்டது.

நீண்டகாலத் திட்டமிடலின்கீழ், விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கத்திலும் மேம்பாட்டிலும் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடும் என்றும் கூறப்பட்டது. சிங்கப்பூரின் மாறிவரும் வாழ்க்கைமுறை, பொழுதுபோக்குத் தேவைகள் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்கும் விதமாகச் சமூகத்துடன் அரசாங்கம் அணுக்கமாகச் செயலாற்றும் என்றும் கூட்டறிக்கை கூறியது.

இரு வளாகங்களும் மூடப்பட்ட பிறகு, வாம்போ, கேலாங் பாரு குடியிருப்பாளர்கள் கொளம் ஆயரில் உள்ள புதிய விளையாட்டு இடத்துக்கோ வாம்போவில் இந்த ஆண்டிறுதிக்குள் கட்டி முடிக்கப்படவிருக்கும் மற்றொரு விளையாட்டு இடத்துக்கோ செல்லலாம்.

சிராங்கூன், கேலாங் ஈஸ்ட், ஜாலான் புசார் ஆகியவற்றில் உள்ள ‘ஆக்டிவ்எஸ்ஜி’ நீச்சல் குளங்கள், காலாங் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ ஸ்குவாஷ் நிலையத்திலுள்ள டென்னிஸ், ஸ்குவாஷ் திடல்கள் போன்றவற்றை நாடலாம்.

இரு-பயன்பாட்டு முறையின்கீழ், பெண்டிமியர் தொடக்கப்பள்ளியின் உள்ளரங்க விளையாட்டு வசதி, பெண்டிமியர் உயர்நிலைப் பள்ளியின் காற்பந்துத் திடல் ஆகியவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.

அரசாங்கத்தின் ‘விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தின்’ ஓர் அங்கமாக, சிங்கப்பூரின் பலதரப்பட்ட விளையாட்டு ஆர்வம், தேவைகள் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில், ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி அமைப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்