சிங்கப்பூர்த் தைப்பூசத்தின் சிறப்பே பல இனத்தவரும் அதில் கலந்துகொள்வதுதான்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) விடியற்காலையில் விநாயகர் சிலையுடனான ரதத்தைச் சீனர் ஒருவர் இழுப்பதும் அவரது அருகிலேயே, அழகான அலகுக் காவடியை மற்றொரு சீனர் சுமப்பதும் பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.
காவடி சுமப்பது அவர்கள் உதிரத்தில் கலந்த நடவடிக்கை என்றுகூடச் சொல்லலாம்.
ரதத்தை இழுத்தவர் மகன் ஷேன். அலகுக் காவடி சுமந்தவர் தந்தை மைக்கேல் லிம்.
“எனக்குக் கல்லீரல் பிரச்சினைகள் ஏற்பட்டபோது என் நண்பர் என்னைப் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள இறைவன், என்னைக் காப்பாற்றமுடியும் என என்னிடம் கூறினார். அத்துடன் தைப்பூசத்தில் பங்கேற்கவும் என்னை ஊக்குவித்தார். அதனால் 21 ஆண்டுகளுக்குமுன் நான் தைப்பூசத்தில் பங்கேற்கத் தொடங்கினேன். இன்றுவரை தவறாமல் ஆண்டுதோறும் காவடி எடுக்கிறேன்,” என்றார் மைக்கேல்.
“சீன, இந்துப் பண்பாடுகள் சங்கமிப்பது சிறப்பு என்று கருதுகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக அலகு குத்திவருகிறேன். சென்ற ஆண்டு என் சகோதரர் என்னுடன் காவடி எடுத்தார். இவ்வாண்டு நானும் தந்தையும் மட்டும்தான் எடுத்தோம். எங்களை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி,” என்றார் மகன் ஷேன்.
அவர்கள் இருவரும் ‘யு ஃபெங் நாம் ஃபு ஷுவான் ஷான் மியாவ்’ (Yu Feng Nam Fu Xuan Shan Miao) எனும் சமயம்சார்ந்த அமைப்பில் இருக்கின்றனர். அவ்வமைப்பின் தொண்டூழியர்கள் அவர்களின் காவடிப் பயணத்தில் இணைந்து பேராதரவு அளித்தனர்.
இந்தியப் பண்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சீனர்கள் சிலர் தைப்பூசத்தில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் வேலரியை அவரது நண்பர் பிளாசா சிங்கப்பூரா பகுதியிலிருந்து தைப்பூச ஊர்வலத்தில் அழைத்துச் சென்றார். “நான் பள்ளிப் பருவத்தில் தைப்பூசம் பற்றிக் கற்றுள்ளேன். தைப்பூசத்தில் அடங்கியுள்ள மரபு, வரலாற்றைக் கண்டு, அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினேன்,” என்றார் வேலரி.
அவர் தனது ‘ரிக்கோ’ கேமராவில் பல காட்சிகளைப் படங்களாகப் பதிவுசெய்துகொண்டார்.
தைப்பூசத்தில் ஆர்வம் கொண்ட மற்றொருவர் திரு பேட்ரிக்.
“பத்து ஆண்டுகளாக நான் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்கிறேன். தைப்பூசம் பொது விடுமுறையாக அறிவிக்கப்படவேண்டும் என்பது என் விருப்பம். இவ்வாண்டு பால் ஊற்றுவது, பால்குடம் தருவது போன்றவற்றைப் புதிதாகக் கண்டேன். முதியோர்கூடப் பங்கேற்றதைக் காண்பது சுவாரசியமாக இருந்தது.
“தைப்பூசத்துக்காக மக்கள் பல மாதம் தயார்செய்கின்றனர். சைவ உணவையே உண்கின்றனர். இதைப் பெரிதும் பாராட்டுகிறேன். இந்த பல இனக் கலாசாரத்தை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும்,” என்றார் திரு பேட்ரிக்.
தைப்பூச வார இறுதியில் பல பணிகளில் ஈடுபட்டு பிறரைக் கவர்ந்தார் தொண்டூழியர் ஜெகன், 28.
ஸ்ரீ மாரியம்மன் கோயில், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் எனப் பல கோயில்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொண்டூழியராகச் சேவையாற்றியுள்ளார் ஜெகன். தோற்றத்தில் சீனர்; ஆனால் தமிழ்ப் பெயரைக் கொண்டுள்ள இவர். தமிழிலும் பிற தொண்டர்களுடன் பேசுகிறார். “என் தாயார்தான் என்னை முதன்முதலில் கோயிலுக்கு அழைத்துவந்தார். அவரும் ஒரு நெடுங்காலத் தொண்டூழியர்,” என்றார் ஜெகன்.
தன் கணவருடனும் சக சீன நண்பர்களுடனும் பால்குடம் எடுத்தார் கேரல் சுவா, 55.
“நான் ராஜயோக தியானப் பயிற்சி செய்கிறேன். எங்கள் குரு முருகனைத் தரிசிக்க அறிவுறுத்தினார். அதனால் நான் தைப்பூசத்தில் முதன்முறையாகப் பால்குடம் எடுக்கிறேன்,” என்றார் திருவாட்டி கேரல்.

