சிங்கப்பூர் அரசாங்கத்தின் தொழில்நுட்ப அமைப்பான கவ்டெக் இரண்டாம் முறையாக அதன் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
அந்த அமைப்பு மொத்தம் மூன்று ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 38 ஊழியர்கள் அந்த அமைப்பில் இரண்டாம் கட்ட ஆட்குறைப்புக்கு ஆளாகினர்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தக்கூடிய பணியில் அதிக உரிமையைச் செயல்படுத்துவதோடு அதற்கு உதவும் வெளி ஊழியர்களின் சேவையைக் குறைக்க வேண்டிய காரணத்தால் தற்போதைய ஆட்குறைப்பு செய்யப்பட்டது என்று கவ்டெக் அமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 22) ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தது.
அமைப்பில் உள்ள மற்ற ஊழியர்கள் குறித்தும் மறுஆய்வு செய்யப்படுவதாகவும் கவ்டெக் குறிப்பிட்டது.
“மனிதவள மறுஆய்வின்படி, 106 அதிகாரிகள் அவர்களது தற்போதைய பணியில் தொடர்ந்து இயங்குவர். மேலும் 106 ஊழியர்கள் மாற்றுப் பணிகளுக்கும் தொழிற்பயிற்சிக்கும் (அப்ரென்டிஸ்ஷிப்) தகுதிபெறுவர்,” என்று கவ்டெக் தெரிவித்தது.
அவ்வாறு தொழிற்பயிற்சிக்கும் செல்வோருக்கு அதற்கான மாற்றம் நிகழும்போது முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் கவ்டெக் கூறியது.
முதற்கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் மேற்கொண்டதைப் போன்றே இம்முறையும் முடிந்தவரை ஊழியர்களை தக்கவைத்து, பயிற்சிகள் வழங்கி மாற்றுப் பணிகளில் அவர்களை அமர்த்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக கவ்டெக் தெரிவித்தது.
ஒட்டுமொத்தமாக 3,900 ஊழியர்களைக் கொண்ட அமைப்பில், முதற்கட்ட ஆட்குறைப்பு இவ்வாண்டு ஜூலை மாதத்தில் நடந்தது. அதில் 93 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைப்பின் 7 முதல் 9 விழுக்காட்டு ஊழியர்கள் அதன் மூன்றாம் கட்ட ஆட்குறைப்பு உட்பட்ட மனிதவள மறுஆய்வு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவர் என்று கவ்டெக் கருதுகிறது.
அரசாங்கத்தின் பொதுச்சேவைத் துறை, திறன் மற்றும் ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு, ஆணைபெற்ற நிறுவன ஊழியர்களின் ஒருங்கிணைந்த தொழிற்சங்கம் ஆகியவற்றுடன் கவ்டெக் இணைந்து வாழ்க்கைத் தொழில் பயிற்சி, மாற்று வேலைக்கான ஏற்பாடு போன்றவற்றில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
