கெப்பலின் நிகர லாபம் 3ஆம் காலாண்டில் 20% உயர்வு

கெப்பலின் நிகர லாபம் 3ஆம் காலாண்டில் 20% உயர்வு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Oct 2026 - 4:24 pm

2 mins read

சிங்கப்பூரின் முன்னணிச் சொத்து நிர்வாக நிறுவனமான கெப்பல், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அதன் நிகர லாபத்தில் 20 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

அதன் முதன்மைத் தொடர் வணிகப் பிரிவான ‘நியூ கெப்பல்’ ஈட்டிய வலுவான வருவாய் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

மூன்றாம் காலாண்டில் ‘நியூ கெப்பல்’ பிரிவின் வருவாய் ஆண்டு அடிப்படையில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு கூடியது. குறிப்பாக, அதன் உள்கட்டமைப்பு, இணைப்புச் சேவைத் துறைகள் சிறப்பாகச் செயல்பட்டிருந்தன.

கெப்பல் நிறுவனம் வியாழக்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட அதன் வர்த்தக அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

கெப்பலின் ஒன்பது மாதச் செயல்பாடு

2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கெப்பலின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 40 விழுக்காடு சரிந்தது.

நிறுவனத்தின் வர்த்தகக் கணக்குகளில் எஞ்சியுள்ள முதன்மை சாராச் சொத்துகளின் சந்தை மதிப்பு சரிந்ததே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நியூ கெப்பல், சென்ற ஆண்டைக் காட்டிலும் 20 விழுக்காட்டுக்கும் அதிகமான நிகர லாபத்தைப் பதிவு செய்தது. அதே காலகட்டத்தில் கெப்பல், சொத்து நிர்வாகக் கட்டணமாக $354 மில்லியனை ஈட்டியது; இது கடந்த ஆண்டைவிட 18 விழுக்காடு அதிகம்.

கெப்பலின் தலைமை நிர்வாக அதிகாரி லோ சின் ஹுவா இதுகுறித்துக் கருத்துரைத்தார்.

“அத்தியாவசிய எரிசக்தி, மின்னிலக்க உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் உலகளாவிய சொத்து நிர்வாகியாகவும் இயக்குநராகவும் எங்கள் உத்தியை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருவதால், நியூ கெப்பல் மூன்றாம் காலாண்டிலும் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் தொடர்ந்து வலுவாகச் செயல்பட்டுள்ளது,” என்றார் அவர்.

அக்டோபர் 28ஆம் தேதி முடிவில் கெப்பலின் பங்குகள் 0.3 விழுக்காடு அல்லது $0.03 உயர்ந்து $10.13 ஆக நிறைவடைந்தன.

குறிப்புச் சொற்கள்