சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி கடந்த ஜூலை மாதம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக அளவில் சரிந்தது.
அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக அந்நாட்டுக்குச் சிங்கப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள் 42.7 விழுக்காடு குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூலை மாதம், எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 4.6 விழுக்காடு சரிந்தது.
ஜூன் மாதத்தில் திருத்தப்பட்ட 12.9 விழுக்காடு விரிவாக்கத்துக்குப் பிறகு இந்நிலை ஏற்பட்டது.
இந்தத் தகவலை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) வெளியிட்டது.
புளூம்பர்க் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்த 3.8 விழுக்காடு சரிவைவிட உண்மையில் பதிவான சரிவு அதிகம்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஏற்றுமதிச் சந்தை அமெரிக்கா ஆகும்.
இருப்பினும், அந்நாட்டுக்கு சிங்கப்பூரிலிருந்து அனுப்பப்பட்ட முக்கிய ஏற்றுமதி வெகுவாகக் குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
சீனாவுக்கான சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 12.2 விழுக்காடும் இந்தோனீசியாவுக்கான சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 32.2 விழுக்காடும் சரிந்தன.
ஜூலை மாதத்தில், ஆண்டு அடிப்படையில் மின்னணுவியல் பொருள்களின் ஏற்றுமதி 2.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.
அதற்கு முந்தைய மாதத்தில் அது 8 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தது.
கணினி ஏற்றுமதி 80.4 விழுக்காடு, மின்சுற்றுப் பலகைகளின் ஏற்றுமதி 25.8 விழுக்காடு அதிகரித்தன.
ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் அல்லது சில்லுகளின் ஏற்றுமதி 8 விழுக்காடு உயர்ந்தது.
மின்னணுவியல் சாரா ஏற்றுமதி ஜூலை மாதம் 6.6 விழுக்காடு குறைந்தது.
ஜூன் மாதத்தில் அது 14.4 விழுக்காடு அதிகரித்திருந்தது.
மருந்து ஏற்றுமதி 18.9 விழுக்காடு, உணவுத் தயாரிப்புப் பொருள்கள் 26.3 விழுக்காடு சுருங்கின.
பெட்ரோலிய ரசாயின ஏற்றுமதி 23.4 விழுக்காடு சரிந்தது.
தங்கக் கட்டிகள் ஏற்றுமதி 104 விழுக்காடு உயர்ந்தது.
சிறப்பு இயந்திரங்கள் ஏற்றுமதி 22.4 விழுக்காடு அதிகரித்தது.

