இரண்டாம் காலாண்டில் முக்கிய ஏற்றுமதி 7.1% அதிகரிப்பு

2 mins read
முழு ஆண்டுக்கான முன்னுரைப்பில் மாற்றமில்லை
48d0bc53-47a8-4e54-a1e1-21086969457f
இந்த ஆண்டுக்கான முக்கிய ஏற்றுமதி வளர்ச்சி கிட்டத்தட்ட 1 விழுக்காடாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறியுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் இரண்டாம் காலாண்டில் தொடர்ந்து வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க வரிகள் நடப்புக்கு வருமுன் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரித்தது இதற்கு உதவியது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 7.1 விழுக்காடு அதிகரித்தது.

இருந்தபோதும் இனி வரும் மாதங்களில் அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் நிர்வாகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் கவலை அடைந்திருப்பதை அவர்கள் சுட்டினர்.

இதனால் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் தேவைகளைக் குறைத்துக்கொள்ள நேரிடலாம் என்றும் துறைசார்ந்த வரிகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்கிறது என்றும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

வரிகளைத் தவிர்க்கும் நோக்கில் முன்கூட்டியே கொள்முதல் செய்யும் போக்கும் அடுத்து வரும் மாதங்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது சொன்னது.

இந்த ஆண்டுக்கான முக்கிய ஏற்றுமதி வளர்ச்சி 1 முதல் 3 விழுக்காடாக இருக்குமென முன்னர் முன்னுரைக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில் அது கிட்டத்தட்ட 1 விழுக்காடாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.

இரண்டாம் காலாண்டில் வர்த்தகப் பரிமாற்றத்துக்கு அல்லாத தங்கத்தின் (Non-monetary gold) ஏற்றுமதி 82.5 விழுக்காடு ஏற்றம் கண்டது.

கணினி ஏற்றுமதி 78 விழுக்காடு அதிகரித்தது.

பரவலாக, இந்த ஆண்டின் முற்பாதியில் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் முற்பாதியுடன் ஒப்புநோக்க 5.2 விழுக்காடு கூடியது.

அமெரிக்க வரி குறித்த கவலையால் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் முன்கூட்டியே கொள்முதல் செய்ய முனைந்ததையடுத்து ஏற்றுமதி அதிகரித்ததாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்