சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட விரைவான வளர்ச்சி கண்டுள்ளன.
மின்னணுப் பொருள்கள், மின்னணு சாராப் பொருள்கள் என இரு பிரிவுகளிலும் ஏற்றுமதி அதிகரித்ததால் இது சாத்தியமானது.
ஆண்டு அடிப்படையில், எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி, ஏப்ரல் மாதம் 12.4 விழுக்காடு அதிகரித்தது. ஒப்புநோக்க, மார்ச் மாதத்தில் அந்த விகிதம் 5.4 விழுக்காடாகப் பதிவானது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவித்தன.
முன்னதாக, புளூம்பெர்க் கருத்தாய்வில் பங்கேற்ற ஆய்வாளர்கள் சிங்கப்பூரின் ஏப்ரல் மாத ஏற்றுமதி 4.3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைத்திருந்தனர். ஆனால் அதைவிட மிக அதிகமான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
ஏப்ரலில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் 23.5 விழுக்காடு அதிகரித்தது. மார்ச் மாதம் பதிவான வளர்ச்சியைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு.
மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரலில் 9.3 விழுக்காடு அதிகரித்தது. ஒப்புநோக்க, மார்ச்சில் இந்த விகிதம் 3.7 விழுக்காடாக இருந்தது.
ஏப்ரல் மாத ஏற்றுமதி அதிகரித்ததற்குத் தங்கத்தின் ஏற்றுமதி 80.4 விழுக்காடு ஏற்றம்கண்டது முக்கியக் காரணம். கப்பல், படகு உள்கட்டமைப்புகள், குறிப்பிட்ட காரணத்துக்காக வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களின் ஏற்றுமதி 7.2 விழுக்காடு அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியா, தைவான், தென்கொரியா ஆகியவற்றுக்கான எண்ணெய் சாரப் பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி கண்ட வேளையில் மலேசியா, சீனா ஆகியவற்றுக்கான அத்தகைய ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது.
குறிப்பாக, சீனாவுக்கான ண்ணெய் சாரப் பொருள்களின் ஏற்றுமதி 17 விழுக்காடு குறைந்தது.
ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 1.2 விழுக்காடு கூடியது. மார்ச்சில் அந்த விகிதம் 6.2 விழுக்காடாகப் பதிவானது.
இந்தோனீசியாவுக்கான ஏற்றுமதி 111.2 விழுக்காடு அதிகரித்தது. மார்ச்சில் அது 62.9 விழுக்காடாக இருந்தது.
தைவானுக்கும் தென்கொரியாவுக்குமான ஏப்ரல் மாத ஏற்றுமதி முறையே 47.4 விழுக்காடு, 38.1 விழுக்காடாகப் பதிவானது.