பரிவுமிகு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல் கனிவன்புதான் என்றும் அத்தகைய பண்புகள் மிளிரும் எந்தவொரு செயலும் தேசத்தின் உணர்வைக் கட்டியெழுப்பும் என்றும் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
கனிவன்பு இயக்கத்தின் இந்த ஆண்டுக்கான கனிவன்பு தினக் கொண்டாட்டங்கள் ‘உங்கள் கனிவன்பு மலரட்டும்’ எனும் கண்காட்சியுடன் வெள்ளிக்கிழமை (மே 23) மாலை, சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்தின் வருகை மண்டபத்தில் தொடங்கியது.
இவ்விழாவில் காணொளி வழியாகச் சிறப்புரையாற்றிய திரு டோங், சிங்கப்பூர் அதன் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணத்தில், நாட்டைக் கட்டியெழுப்புவதில் கனிவன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“சிங்கப்பூரின் வலிமை நம் சாதனைகளில் மட்டுமல்லாமல் மக்கள் கொண்டிருக்கும் கனிவு, கருணை ஆகியவற்றிலும் உள்ளது என்பதைப் பறைசாற்றுவோம்,’’ என்றார் திரு டோங்.
‘‘அதேபோலக் கனிவன்பு என்பது நாம் செய்யும் செயல்கள் என்றில்லாமல் நாமே கனிவன்பாகத் திகழ்வோம்,’’ என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, கனிவன்பைக் கொண்டாடும் விழாவின் ஓர் அங்கமாக, கனிவன்பு இயக்கத்துடன் 10 ஆண்டுகாலமாக இணைந்து சிறப்பாகப் பங்காற்றிய சமூகப் பங்காளிகளுக்கு ‘நீடித்தல் விருது’ (Stickability awards) வழங்கப்பட்டது.
மேலும் கனிவன்பு மிளிரும் சிங்கப்பூரை உருவாக்க நீண்டதும், நிலைத்திருப்பதுமான பங்களிப்பை நல்கியதற்காகவும், சமுதாயத்தில் ஆக்ககரமான மாற்றத்திற்கு வித்திட்டதற்காகவும் இந்த ஆண்டிற்கான ‘நீடித்தல்‘ விருதைப் பெற்றார் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அமைப்பின் நிறுவனர் தீபா சுவாமிநாதன்.
இவ்விருதை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தமிழ் முரசிடம் கூறிய திருவாட்டி தீபா, ‘‘கனிவன்பு இயக்கத்துடன் இணைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதை நம்ப இயலவில்லை,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“கனிவுமிக்க செயல்களைச் செய்ய பூமி நமக்கேற்றவாறு மாற வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம்.
‘‘அர்த்தமிக்க நற்செயல்களைப் புரிய வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யும் எந்தவோர் எளிய செயலும் அற்புதமான மாற்றத்துக்கு வழிவகுக்கும்,’’ என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் நிறுவியுள்ள கண்காட்சியை மே 23 முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை பார்வையிடலாம்.