ரீமா டுடெகுலா
ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி புதன்கிழமை (ஜனவரி 28) அப்தேயலி தய்யிபலி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
அப்தேயலி தய்யிபலி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி ராஃபிள்ஸ் டவுன் கிளப்பில் நடைபெற்றது.
விருதை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய பேராசிரியர் கிஷோர் தமது வாழ்க்கை ஏற்றஇறக்கங்கள் நிரம்பியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
“துணி விற்பனையாளராக மாதம் 150 வெள்ளி சம்பளத்திற்கு எனது வேலை வாழ்க்கை தொடங்கியது. எதிர்பாராதவிதமாக, அரசாங்கம் எனக்கு அதிபர் கல்விமான் விருது வழங்கியது. அதன்மூலம் மாதந்தோறும் எனக்கு $250 கிடைத்தது. அதனால், ‘150 வெள்ளியைவிட 250 வெள்ளி அதிகம். நீ பல்கலைக்கழகத்திற்குப் போ’ என்று என் தாயார் கூறினார்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
ஐம்பதாண்டுகளுக்குமேல் வாழ்க்கைத்தொழில் அனுபவமிக்க பேராசிரியர் கிஷோர், ஆசியாவின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகத் திகழ்கிறார். தூதராகப் பயிற்சிபெற்ற அவர், கம்போடியா, மலேசியா, வாஷிங்டன், நியூயார்க் போன்ற இடங்களில் சிங்கப்பூர் வெளியுறவுத் துறையில் சேவையாற்றினார். பின்னர் ஐநாவிற்கான சிங்கப்பூர் நிரந்தரப் பிரதிநிதியாக அவர் சேவையாற்றினார்.
கடந்த 2001, 2002ஆம் ஆண்டுகளில் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தலைவராகச் சேவையாற்றிய பெருமையும் அவருக்கு உண்டு. சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டைச் சேர்ந்த ஒருவர்க்கு இத்தகைய அரும்பெரும் சிறப்பு கிடைத்தது பெருமைப்படத்தக்கது.
“இந்த விருதுக்காகவும் எனது பணிகளுக்காகக் கிடைத்த அங்கீகாரத்திற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று பேராசிரியர் கிஷோர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வெளியுறவுத் துறையிலிருந்து விலகியபின் கல்விப் பாதையைத் தேர்ந்தெடுத்தார் அவர். லீ குவான் இயூ பொதுக் கொள்கைக் கழகத்தின் நிறுவனத் தலைவராகச் செயலாற்றி, ஒரு புதிய தலைமுறைக் கொள்கை வகுப்பாளர்கள் உருவாகப் பெரிதும் துணையாக இருந்தார். பல நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.
பேராசிரியர் கிஷோருக்கு விருது வழங்கிப் பேசிய திரு விஸ்வரூபன் சதாசிவன், “பேராளர்கள் பலர் கூடியிருக்கும் ஓர் அறைக்குள் நுழைந்து, ‘உங்களது சொந்த நலனுக்காக நான் உங்களுடன் உடன்படப் போவதில்லை’ எனச் சொல்லக்கூடிய வெகு சிலரில் பேராசிரியர் கிஷோரும் ஒருவர். அதற்காக அவர்களுக்கு அவரைப் பிடிக்கும். சுருக்கமாகச் சொன்னால், அவர் விரும்பத்தக்க வகையில் எரிச்சலூட்டுபவர்,” எனக் கூற, அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.
இதற்குமுன் டாக்டர் குமரன் ராசப்பன், டாக்டர் சுதா நாயர் உள்ளிட்ட பத்துப் பேருக்கு அப்தேயலி தய்யிபலி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
reemad@sph.com.sg

