மூடிக் கிடக்கும் கோமள விலாஸ் உணவகம்; வதந்திகளால் வாடிக்கையாளர்கள் கவலை

விரைவில் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்கிறார் உரிமையாளர்

மூடிக் கிடக்கும் கோமள விலாஸ் உணவகம்; வதந்திகளால் வாடிக்கையாளர்கள் கவலை

4 mins read
e9086540-0d52-4cf8-b9b7-a79c47c6f464
தேசிய மரபுடைமைக் கழகத்தின் ‘சிங்கப்பூர் மரபுடைமை வணிகப்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளது கோமள விலாஸ் உணவகம். -  படம்: த.கவி

சிராங்கூன் சாலையிலுள்ள புகழ்பெற்ற உணவகமான கோமள விலாஸ், புதுப்பிப்புப் பணிகளைக் காரணமாகக் கூறி, இவ்வாண்டு ஜனவரி 19ஆம் தேதி தனது கதவுகளை மூடியது.

அதன்பின் ஒரு மாதமாகியும் உணவகம் திறக்கப்படாததால் அதுபற்றிச் சமூக ஊடகங்களில் பல செய்திகள் பரவத் தொடங்கின. கடை விற்கப்பட்டுவிட்டதாக அல்லது நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடும் அத்தகைய செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை. 

அத்தகைய தகவல்களால் அதிர்ச்சியடைந்த கோமள விலாஸ் வாடிக்கையாளர்கள், உறுதியான மேவ்விவரங்களுக்காகக் காத்திருந்தனர். இரண்டு மாதங்கள் கழித்தும் அந்த உணவகம் திறக்கப்படாததால் அது வணிகத்தைத் தொடருமா இல்லையா என்பது குறித்த ஊகங்கள் தொடர்ந்து வட்டமிடுகின்றன.

எண் 76-78, சிராங்கூன் சாலை என்ற முகவரியில் ஒரே குடும்பத்தின் பல தலைமுறையினரின் நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வந்துள்ளது கோமள விலாஸ்.

இந்நிலையில், கடை மீண்டும் திறக்கப்படுமா அல்லது நிரந்தரமாக மூடப்படுமா என்ற கேள்வியை முன்வைக்கும் பதிவு ஒன்று ‘சிங்கப்பூர் டிராவல் டிப்ஸ் அண்ட் பிளான்ஸ்’ என்ற ஃபேஸ்புக் குழுப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

புதுப்பிப்பிற்காக மூடப்பட்ட அந்த உணவகம் திறந்திருப்பதாக ‘ஆப்பிள் மேப்ஸ்’ செயலி குறிப்பிட்டிருந்தது வருத்தமளித்ததாக அந்தப் பதிவை எழுதியவர் கூறியிருந்தார். இந்தியச் சமூகத்திற்கு அப்பால், பிற இனத்தவரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் அடிக்கடி வந்துசெல்லும் இவ்வுணவகம் மூடியிருப்பது குறித்துப் பலருக்கும் இன்னும் தெரியாது.

அதே ஃபேஸ்புக் குழுப் பக்கத்தில், “எழுபது ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டுவந்த, தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால் நடத்தப்பட்ட  இந்தப் புகழ்பெற்ற தென்னிந்திய சைவ உணவகம் தற்போது மூடப்பட்டுள்ளதைக் காணும்போது கவலையாக உள்ளது,” என மற்றோர் இணையவாசி பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுகளை அடுத்து, கோமள விலாஸ் உணவகம் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டும் பதிவுகளை வாடிக்கையாளர்கள், ‘கூகல் ரிவியூஸ்’ தளம் வழியாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

உணவகம் திறந்திருப்பதாகக் குறிப்பிடும் இணையத்தளங்களால் நேரில் சென்ற சிலர், அது மூடப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்ததாகச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்துள்ளனர்.
உணவகம் திறந்திருப்பதாகக் குறிப்பிடும் இணையத்தளங்களால் நேரில் சென்ற சிலர், அது மூடப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்ததாகச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்துள்ளனர். -  படம்: த.கவி

கோமள விலாஸ் சைவ உணவகம், 1947ஆம் ஆண்டு அமரர் முருகையா ராஜூவால் நிறுவப்பட்டது. தற்போது அவரது பேரனான 40 வயது ராஜாகுமார் குணசேகரன் அதனை நடத்தி வருகிறார்.

உள்நாட்டில் பெரும்புகழை ஈட்டியுள்ள இந்த உணவகம், சுற்றுப்பயணிகளையும் பெருந்திரளாக ஈர்த்துவந்தது.

2015ல் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங்கையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் வரவேற்று, விருந்தோம்பல் செய்த பெருமையும் கோமள விலாசுக்கு உண்டு.

பின்லாந்தின் கல்வி, கலாசார அமைச்சர் ஆண்டர்ஸ் ஆடலர்கிரோட்சை சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இந்த உணவகத்தில் இவ்வாண்டு ஜனவரி 18ஆம் தேதி உபசரித்ததும் குறிப்பிடத்தக்கது. 

தோசையையும் மசாலா தேநீரையும் சுவைத்துக்கொண்டே பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடியதாக அமைச்சர் சண்முகம், ஜனவரி 19ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய மரபுடைமைக் கழகத்தால் சிங்கப்பூர் மரபுடைமை வணிகமாக இந்த உணவகம் பட்டியலிடப்பட்டுள்ளது. 

மார்ச் 18ஆம் தேதி எடுக்கப்பட்ட படம். கோமள விலாசின் மரபுடைமைப் பொருள்கள் தொடர்ந்து பேழையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 18ஆம் தேதி எடுக்கப்பட்ட படம். கோமள விலாசின் மரபுடைமைப் பொருள்கள் தொடர்ந்து பேழையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. -  படம்: த.கவி

எண் 291, சிராங்கூன் சாலை எனும் முகவரியில் 2025 நவம்பர் 1ல் தொடங்கப்பட்ட கோமள விலாஸ் கிளை நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது அவ்விடத்தில் வேறோர் இந்திய உணவகம் செயல்பட்டு வருகிறது.

இதற்குமுன் நீண்ட காலமாக பஃப்ளோ சாலையில் அமைந்திருந்த கோமள விலாஸ் கிளை மூடப்பட்டு பல்லாண்டுகள் ஆகின்றன. ரேஸ் கோர்ஸ் சாலையிலும் சில காலம் இந்த உணவகம் செயல்பட்டு வந்தது. 

தற்போது அப்பர் டிக்சன் சாலையில் அமைந்துள்ள கோமள விலாசின் பலகாரக் கடையும் மூடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த உரிமையாளர் திரு ராஜாகுமார், தற்போது தாம் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதாகவும் மாத இறுதியில் விளக்கமாகப் பதிலளிப்பதாகவும் கூறினார்.

உணவகத்தின் முன்கதவில் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற விவரம்  அதில் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், தமிழ் முரசின் கேள்விகளுக்குப் பதிலளித்த ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான ராஜகுமார் சந்திரா, கோமள விலாஸ் உணவகம் குறித்து வதந்திகளைப் பரப்பவேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். 

அப்பர் டிக்சன் சாலையிலுள்ள கோமள விலாஸ் பலகாரக் கடையும் மூடப்பட்டுள்ளது.
அப்பர் டிக்சன் சாலையிலுள்ள கோமள விலாஸ் பலகாரக் கடையும் மூடப்பட்டுள்ளது. - படம்: த.கவி

“‘இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டன, எந்த வேலையும் நடக்கவில்லை’ என்பது போன்ற பல வதந்திகள் உலவுகின்றன. கோமள விலாஸ் உணவகத்திற்கு என்னவாயிற்று எனப் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர்,” என்றார் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடையின் உரிமையாளருமான திரு ராஜகுமார். 

“மரபுடைமைச் சிறப்புமிக்க கோமள விலாசில் பலர் உயர்தர சைவ உணவைச் சுவைத்து மகிழ்ந்திருப்பர். அந்த உணவகம் நிலைத்து நிற்பதையே சமூகம் விரும்புகிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினருக்கு அப்பால், பல இன மக்களிடையே பெயர்பெற்ற உணவகமாக கோமள விலாஸ் விளங்குகிறது. சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் தனித்துவ அடையாளங்களில் இந்தப் பழம்பெரும் உணவகமும் ஒன்று என்பதில் ஐயமில்லை. 

சிங்கப்பூர் இந்திய உணவுப் பண்பாட்டிற்கு கோமள விலாஸ் உணவகம் கடந்த 79 ஆண்டுகளாக வளம் சேர்த்து வந்துள்ளதாகச் சிங்கப்பூர் இந்திய உணவுச் சங்கத்தின் கெளரவச் செயலாளர் எஸ் மகேந்திரன் குறிப்பிட்டார்.

“நாங்கள் அறிந்தவரை, அந்த உணவகம் தற்போது புதுப்பிப்புப் பணிகளை எதிர்நோக்குகிறது. அதன் அடுத்தகட்டச் செயல்பாடுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்