கிராஞ்சியில் மறுசுழற்சி, கழிவு நிர்வாக நிறுவனத்தின் கிடங்கில் பிப்ரவரி 19ஆம் தேதி மூண்ட தீயை நான்கு நாள் போராட்டத்திற்குப் பிறகு முழுமையாக அணைத்துவிட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தெரிவித்தது.
இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், கிராஞ்சி கிடங்கில் மூண்ட தீயைக் கடந்த நான்கு நாள்களாக இரவு பகல் பாராது விடாமல் போராடி குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் அணைத்தனர் எனக் குறிப்பிட்டது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட இடத்தில் தீயணைப்பு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தீயணைப்பு வீரர்கள் சிலர் அவ்விடத்தைக் கண்காணித்து வருவதாகவும் குடிமைத் தற்காப்புப் படை அந்தப் பதிவில் தெரிவித்தது.
அந்தக் கிடங்கைப் படிப்படியாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் குடிமைத் தற்காப்புப் படை ஈடுபட்டுவருவதாகவும் அது சொன்னது.
ஏழு ஆண்டுகளில் அக்கிடங்கில் நடந்த நான்காவது தீவிபத்து இது என்றும் அது குறிப்பிட்டது.