கிராஞ்சியில் உள்ள கிடங்கு ஒன்றில் புதன்கிழமை (பிப்ரவரி 19) மூண்ட தீ, ஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக ஏற்பட்ட விபத்து என்றும் அதுகுறித்து அரசாங்க அமைப்புகள் விசாரிக்கின்றன என்றும் ‘சிஎன்ஏ’ தெரிவித்துள்ளது.
தேசியச் சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் விசாரணை மேற்கொள்வதாக அது கூறியது.
எண்11, கிராஞ்சி கிரசென்ட்டில் உள்ள அந்தக் கிடங்கை மறுசுழற்சி, கழிவு நிர்வாக நிறுவனமான ‘வா அண்ட் ஹுவா’ பயன்படுத்தி வருகிறது.
முன்னதாக, மார்ச் 22, 2018, ஜூன் 20, 2023, மார்ச் 28, 2024 ஆகிய தேதிகளில் அந்தக் கிடங்கில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
விசாரணையின் முடிவைப் பொறுத்து அதன் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் கூறியதாக ‘சிஎன்ஏ’ தெரிவித்தது.
புதிய அம்சங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் கழிவுப் பொருள்களைப் பாதுகாப்பாக நிர்வகிப்பது தொடர்பான வழிகாட்டிக் குறிப்புகளை மேம்படுத்த உரிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் வாரியம் கூறியது.
இது தொடர்பான முந்தைய ஆலோசனை அறிக்கை 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தேசியச் சுற்றுப்புற வாரியம், குடிமைத் தற்காப்புப் படை, மனிதவள அமைச்சு ஆகியவை அதை இணைந்து தயாரித்தன.
புதன்கிழமை மூண்ட தீயால் ஒருவருக்குத் தீக்காயங்களும் மூச்சுத் திணறல் பிரச்சினையும் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.