சிங்கப்பூரில் இம்மாத முதல் இரண்டு வாரங்களைவிட பருவநிலை மாறுபட்டு மார்ச் மாதக் கடைசி இருவாரங்கள் வெப்பமாக இருக்கும் என்று வானிலை ஆய்வகம் திங்கட்கிழமை (மார்ச் 16) கூறியது.
ஒரு சில நாள்களில் அன்றாட வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டும் என ஆய்வகம் குறிப்பிட்டுள்ளதால் அதிக நாள்கள் வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சராசரி வெப்பநிலை நாளுக்கு 34 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சில நாள்களில் 35 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டும் வாய்ப்பும் உண்டு.
தீவின் பல பகுதிகளில் மழைப்பொழிவு சராசரியைவிட குறைவாகவே இருக்கும். சில நாள்களில் மதிய வேளையில் இடியுடன் சிறிய அளவில் மழை பெய்யலாம்.
இனிவரும் மார்ச் மாத நாள்களில் வடமேற்கு, வடகிழக்கு திசைகளில் இருந்து காற்று வீசுவதோடு வடகிழக்கு பருவச் சூழல் தொடர்வதால், வெயிலுடன் வெப்பமான நாள்கள் அதிகம் இருக்கும் என வானிலை மையம் கூறியது.

