புதிய ‘எஸ்சிடிஎஃப்’ கடற்படை தலைமையகம் 2026ல் திறப்பு

புதிய ‘எஸ்சிடிஎஃப்’ கடற்படை தலைமையகம் 2026ல் திறப்பு

2 mins read
ed2cf39f-295b-421f-b1bf-7ae549ece18c
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவு தலைமையகக் கட்டடத்தின் மாதிரி வடிவம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆண்டுதோறும் சிங்கப்பூர் துறைமுகங்களில் 140,000க்கும் அதிகமான கப்பல்கள் வந்து செல்கின்றன.

அப்படியிருக்கையில் கடற்பகுதியில் அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய சூழல் ஏதேனும் தலைதூக்கினால் அதைக் கையாள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தயார்நிலையில் உள்ளது. உதாரணமாக, 2022 ஏப்ரல் 17ஆம் தேதி கூசுத் தீவில் மூன்று கோயில்களை அழித்த தீயைக் குடிமைத் தற்காப்பு படை கையாண்டது.

அச்சம்பவத்தில் குடிமைத் தற்காப்புப் படை, 18 குழாய்களை ஒன்றிணைத்து தீயை அணைக்க அதன் கப்பலிலிருந்து கடல் நீரைப் பீய்ச்சியடித்தது.

இந்நிலையில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கடல்துறைப் பிரிவின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் அதற்கான புதிய தலைமையகக் கட்டடம், ஹார்பர்ஃபிரண்ட்டுக்கு அருகே உள்ள பிரானி மரின் தீயணைப்பு நிலையத்துக்குப் பக்கத்தில் அமைக்கப்படும்.

அதன் மூலம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையால் சவாலான கடல்துறை நிகழ்வுகளை ஆக்கபூர்வமான முறையில் கையாள முடியும்.

குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவு 2012ல் தொடங்கப்பட்டது. அப்போது அதில் 50 படையினர் இருந்தனர், இரண்டு தீயணைப்புக் கப்பல்களும் ஒரு தீயணைப்பு நிலையமும் இருந்தன. அந்நிலையம் வெஸ்ட் கோஸ்ட் மரின் தீயணைப்பு நிலையமாகும்.

அப்போது அப்பிரிவுக்னெ தலைமையகம் கிடையாது.

குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவில் தற்போது 220 தீயணைப்புப் படையினர் உள்ளனர்.

இரண்டு தீயணைப்பு நிலையங்கள், ஆறு கப்பல்கள் உள்ளிட்டவையும் அதனிடம் உள்ளன.

இவ்வாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி கடற்பகுதிகளில் ஏற்பட்ட ஆறு தீச்சம்பவங்களையும் 30 மீட்பு நடவடிக்கைகளையும் குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவு கையாண்டிருக்கிறது.

2040ஆம் ஆண்டுக்குள் துவாசில் புதிய மாபெரும் துறைமுகம் அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் கையாளும் கடல்துறை விவகாரங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காகும்.

இத்தகைய சூழலில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவுக்கான தலைமையகக் கட்டடம் 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரானி தீவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற தலைமையகக் கட்டடத்துக்கான நிலம் திருத்தும் சடங்கில் பங்கேற்ற உள்துறை துணை அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம், “கடல்துறைப் பிரிவு வருங்காலத்தில் கூடுதல் ஆற்றல்வாய்ந்ததாக இருக்கும். அவசர சூழல்களில் கூடுதல் வேகமாக, கூடுதல் விவேகமான, கூடுதல் பாதுகாப்பான முறையில் செயல்படும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்