சிங்கப்பூர் ஆயதப் படையின் ராணுவப் பயிற்சிகளை நகர்ப்புறச் சூழலில் மேற்கொள்ள வகைசெய்கிறது புதிய ‘சாஃப்டி சிட்டி’ வளாகம்.
நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய இடங்களைப்போல அது தோற்றமளிக்கிறது.
பெருவிரைவு ரயில் நிலையம், பேருந்து முனையம், உயர்மாடிக் கட்டடங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், சுங்கச்சாவடி எனப் பல்வேறு அம்சங்கள் ‘சாஃப்டி சிட்டி’ வளாகத்தில் இடம்பெறுகின்றன.
லிம் சூ காங்கிற்குத் தென்மேற்கே அமைந்துள்ள அந்த வளாகம், புதன்கிழமை (மார்ச் 19) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஆயுதப்படையினருக்கு மேம்பட்ட பயிற்சிகளை வழங்கும் ‘சாஃப்டி சிட்டி’, 17 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஏறத்தாழ 3,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு அது பயிற்சியளித்துள்ளது.
அவர்களில் ஒருவர், 23 வயது கார்ப்பரல் தினேஷ் ராஜ் பிரகாசம்.
‘சாஃப்டி சிட்டி’யின் தனித்துவமான அதிநவீன அம்சங்கள் ராணுவப் பயிற்சிகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வதோடு சவால் நிறைந்த சூழல்களில் பயிற்சி செய்யவும் உதவுகிறது என்றார் தினேஷ்.
தொடர்புடைய செய்திகள்
இதற்குமுன் நகர்ப்புற வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட முராய் நகர்ப்புறப் பயிற்சி வளாகத்திலும் தினேஷ் பயிற்சி செய்துள்ளார்.
முராய் வளாகத்துடன் ஒப்புநோக்க ‘சாஃப்டி சிட்டி’யில் எந்நேரத்திலும் துப்பாக்கிச்சூட்டு பாவனைப் பயிற்சி நடைபெறக்கூடும் என்றார் தினேஷ்.
“அதற்கு எப்போதும் தயார்நிலையில் இருக்கவேண்டும். வீரர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள வேண்டும்,” என்று தமது அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
‘சாஃப்டி சிட்டி’ ஒரு புதிய அனுபவம் என்றும் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் போர்க்களத்தில் இருப்பதுபோன்ற உணர்வை அது தரும் என்றும் தினேஷ் குறிப்பிட்டர்.
அறிவார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வளாகத்தில் கிட்டத்தட்ட 11,000 உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பாவனைப் பயிற்சிகளுக்குப் பிறகு வீரர்கள் தங்களை மதிப்பிட அவை கைகொடுக்கின்றன.
உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகளுடன் பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளையும் ராணுவ வீரர்கள் ‘சாஃப்டி சிட்டி’யில் பெறுகின்றனர்.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் புதிய பயிற்சி வளாகத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
‘சாஃப்டி சிட்டி’ வளாகம் சிங்கப்பூர் ஆயுதப்படைக்கு மிகப் பெரிய சொத்து என்றும் நகர்ப்புறச் சூழலில் பயிற்சிகளை மேற்கொள்வது வீரர்களை இன்னும் சிறந்த முறையில் ஆயத்தப்படுத்தும் என்றும் அமைச்சர் இங் கூறினார்.