ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமைச் செயலாளர் பதவிக்குத் திரு லாரன்ஸ் வோங்கை முன்மொழியவுள்ளதாக அக்கட்சியின் தற்போதைய தலைமைச் செயலாளரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள மக்கள் செயல் கட்சியின் மாநாட்டு மேடையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) உரையாற்றியபோது திரு லீ இத்தகவலைத் தெரிவித்தார்.
மாநாட்டின் நிறைவு நாளில் உரையாற்றிய திரு லீ, தலைமைத்துவ மாற்றம், பொதுத் தேர்தலுக்கான ஆயத்தம் ஆகியவை குறித்துப் பேசினார்.
“கட்சியின் அடுத்த மத்தியச் செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. புதிய செயற்குழுச் சந்திப்பின்போது, அடுத்த தலைமைச் செயலாளராகத் துணைத் தலைமைச் செயலாளர் லாரன்ஸ் வோங்கைத் தேர்வு செய்யும்படி நான் முன்மொழிய உள்ளேன். இது தலைமைத்துவத்திற்கான மாற்றத்தை நிறைவு செய்யும்,” என்றார் திரு லீ.
கட்சிப் பொதுச்செயலாளராகத் தாம் மாநாட்டில் உரையாற்றுவது இது கடைசி முறை என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட திரு லீ, “நண்பர் லாரன்ஸ் தலைமைச் செயலாளரான பிறகு கட்சியின் செயற்குழுவில் தொடர்ந்து பங்களிக்க விழைகிறேன். குழுவிற்குத் தொடர்ந்து ஆதரவும் ஆலோசனையும் வழங்குவேன்,” என்றும் கூறினார்.
புதிய தலைமைச் செயலாளரை ஆதரிப்பதற்குச் சிறப்பாக செயல்படவுள்ளதாகக் கூறிய திரு லீ, கட்சியை வலுப்படுத்தவும் பிரச்சினைகளையும் சவால்களையும் ஒன்றாக எதிர்கொள்ள சிங்கப்பூரர்களின் ஆதரவை ஒன்றிணைக்கவும் புதிய தலைமைக்கு ஆதரவு அளிக்கவிருப்பதாகவும் சொன்னார்.
கடந்த ஆண்டுகளில் தலைமைத்துவ மாற்றங்கள் சிறப்பாக நடந்தேறியது போலவே இம்முறையும் அவை இலகுவாக அமைந்திடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
1984ஆம் ஆண்டில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய திரு லீ, தொடர்ச்சியாகப் பத்து முறை மசெக-வின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் மத்தியச் செயற்குழுவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
மசெக மாநாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24), புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் 38வது மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்பட்டது. கட்சியின் உயர்மட்ட அளவிலான முடிவுகளை எடுக்கும் அக்குழுவில் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், திரு கா.சண்முகம், திரு. மசகோஸ் ஸுல்கிஃப்லி, திரு. சான் சுன் சிங், திரு டெஸ்மண்ட் லீ, திரு ஓங் யி காங், திருவாட்டி கிரேஸ் ஃபூ, திரு எட்வின் டோங், குமாரி இந்திராணி ராஜா, திரு. விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கட்சி நிர்வாகிகளால் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
19 பேர் கொண்ட ஆரம்பப் பட்டியலிலிருந்து ரகசிய வாக்கெடுப்பு மூலம் மசெகவின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
திரு சீ ஹொங் டாட், டாக்டர் டான் சீ லெங் ஆகியோர் கட்சியினரின் அதிகப்படியான வாக்குகளுடன் முறையே 13வது, 14வது இடத்தைப் பெற்றனர். திரு சீ ஹொங் டாட் செயற்குழுவில் இடம்பிடித்தது இதுவே முதல் முறை. இதனிடையே இவ்விருவரையும் கட்சியின் செயற்குழுவில் இணைக்க 38வது மத்திய செயற்குழுவிற்காகத் தேர்வு செய்யப்பட உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆளும் மக்கள் செயல் கட்சி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநாட்டில் தனது செயற்குழுவைத் தேர்வு செய்வது வழக்கம்.