’அவதார் த லாஸ்ட் ஏர்பெண்டர்’ (Avatar The Last Airbender) திரைப்படத்தின் காட்சிகளைச் சட்டவிரோதமாக இணையத்தில் கசியவிட்டதாக, 26 வயது ஆடவர் ஒருவரைச் சிங்கப்பூர்க் காவல்துறை கைது செய்துள்ளது.
காவல்துறை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இந்தத் தகவலை வெளியிட்டதாக ஏஷியாஒன் செய்தி இணையத்தளம் கூறியது.
அந்த ஆடவர் ஊடக உள்ளடக்கச் சேவையகம் (media server) ஒன்றில் முறையற்ற வகையில் நுழைந்து, இன்னும் வெளியாகாத அந்தத் திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்ததாகக் கூறப்பட்டது. பின்னர், அதன் சில பகுதிகளைச் சமூக ஊடகங்களில் அவர் பரப்பியதாகத் தெரிகிறது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இது தொடர்பாகக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக அந்த ஆடவரை அடையாளம் கண்டு கைது செய்ததாகக் காவல்துறை கூறியது.
அவரிடமிருந்த மின்னணுச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தத் திரைப்படத்தின் நகலும் மீட்கப்பட்டது.
தற்போது, முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டத்தின்கீழ் (Computer Misuse Act) அவர்மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 50,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

