தங்கள் குடும்பத்தின் மூத்தோர் நூறு ஆண்டுகளுக்குமுன் பயன்படுத்திய பொம்மைகளைத் தாம் இன்றும் பயன்படுத்தி வருவதாகக் கூறுகிறார் கலைமாமணி விருது பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் முத்துச்சந்திரன் ராவ்.
தோலில் செய்த பாவைகள் (பொம்மைகள்) மீது ஒளியைப் பாய்ச்சி, திரையில் விழும் அவற்றின் நிழல்கள் மூலம் கதை சொல்லும் கலைதான் தோல்பாவைக்கூத்து.
ஐந்து வயது முதல், தம் தந்தை படைத்த நிகழ்ச்சிகளைப் பார்த்து, அனுபவக் கல்வி மூலம் தம்மைப் பட்டைதீட்டிக் கொண்டவர் இவர்.
தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கான சிறப்பு நேர்காணலில், இக்கலை தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் திரு முத்துச்சந்திரன்.
மன்னர் சரபோஜி தஞ்சாவூரை ஆண்டபோது 12 தலைமுறைகளுக்குமுன் தமது மூதாதையர் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்ததாகக் கூறும் இவரது தாய்மொழி மராத்தி. ஆனாலும் தமிழில் சரளமாகப் பேசி, தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சிகளை இவர் நடத்துகிறார்.
கிட்டத்தட்ட 30 குரல்களில் நிகழ்ச்சிகளைப் படைக்கும் இவர், இது ஒரு குடும்பக் கலை என்கிறார். நிகழ்ச்சிக்கான இசையில் இவரது மனைவியும் பாவைகளைத் தயாரிப்பதில் இவரது தம்பியும் தூண்களாக விளங்குகின்றனர்.
பாவை உருவாக்கம்
ஆட்டின் தோலைப் பக்குவப்படுத்திப் பாவைகள் செய்யப்படுகின்றன. பாவைகளுக்கு வண்ணம் தீட்ட, இயற்கையான சாயங்களையே இவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பச்சை நிறத்துக்கு வாடாச்சி மர இலையின் சாறு, இளஞ்சிவப்பு வண்ணத்துக்குச் சப்பாத்திக் கள்ளிப் பழத்தின் சாறு, மஞ்சள் நிறத்துக்கு பூவரசு மொட்டு, நீல வண்ணத்திற்குப் பூலாத்திப் பழம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் கலவைகளைக் கொண்டு பிற வண்ணங்களைத் தயாரித்துப் பயன்படுத்துவதாகவும் எண்ணெய்ப் புகையை மண்சட்டியில் படியவிட்டு, வேப்பம் பிசினுடன் கலந்து கறுப்பு மை தயாரித்துப் பயன்படுத்துவதாகவும் திரு முத்துச்சந்திரன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த இயற்கையான நிறங்களைப் பாவையின் ஒரு பக்கத்துக்குத் தீட்டினால் போதும்; விளக்கு வெளிச்சத்தில் மறுபக்கத்திலும் அது தெரியும் என்றார்.
ஒரு பாவை தயாரிக்கப்பட்ட உடனே அதனுடன் ஏற்படும் சொல்லில் வடிக்கவியலாப் பிணைப்புதான் நொடிப்பொழுதில் அந்தந்தப் பாவைக்கேற்ற குரலை மாற்றும் ஆற்றலைத் தமக்குத் தருவதாகத் திரு முத்துச்சந்திரன் சொன்னார்.
ராமாயணத்திலிருந்து, மூக்கறுபட்ட சூர்ப்பனகை தன் அண்ணன் ராவணனிடம் புகார் உரைத்தல், ராமனுக்கு முடிசூட்டுவது தொடர்பில் விசுவாமித்திரர், வசிட்டர் உள்ளிட்டோர் கலந்துரையாடுதல் போன்ற சில பகுதிகளை நடித்துக் காட்டினார்.
பழைமையில் புதுமை
ஒளி அமைப்பு இந்தக் கலைக்கு மிகவும் முக்கியம். தமது தாத்தா காலம்வரை பின்னங்கொட்டை எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய இவர், இப்போது காலமாற்றத்துக்கேற்ப ‘எல்இடி’ விளக்குகளைப் பயன்படுத்துவதாகச் சொன்னார்.
தம் தந்தையார் காலம்வரை இதிகாச, புராணக் கதைகளைச் சொல்லும் நிகழ்ச்சிகளே படைக்கப்பட்டதாகவும் தற்போது கல்வி, ஒழுக்கம், பல்லுயிர்ச்சூழல், பிளாஸ்டிக் பயன்பாடு, போதைப்பொருளைத் தவிர்த்தல், கொவிட்-19 விழிப்புணர்வு, பெண்ணுரிமை எனப் பல்வேறு தலைப்புகளில் தாம் நிகழ்ச்சிகளைப் படைப்பதாகவும் அதற்குப் பார்வையாளர்களிடையே பெரிதும் வரவேற்பு இருப்பதாகவும் இவர் குறிப்பிட்டார். புதுமையான பாவைகளைத் தம் தம்பி வடிவமைப்பதாகவும் சொன்னார்.
“அந்தக் காலத்தில் ராமாயணக் கதை சொல்லும் பாவைக் கூத்து நடத்தினால், ராமன் பட்டாபிஷேகத்துக்கு முன்பாக மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. மழை பொய்த்துப்போன இடங்களில் அவ்வாறு தோல்பாவைக் கூத்து நடத்தினால் மழை கட்டாயம் பெய்ததைப் பார்த்திருக்கிறேன்,” என்றார் திரு முத்துச்சந்திரன்.
மேலும், “வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில்கூடப் பலர் இணைந்துதான் படைப்பர். தமிழ்நாட்டில் நடைபெறும் தோல்பாவைக்கூத்தில் மட்டுந்தான் ஒரே கலைஞர் அனைத்துக் குரல்களிலும் பேசி நடிக்கும் முறை உள்ளது,” என்றார் இவர்.
சிங்கப்பூரில் பயிலரங்கு நடத்த வருவதற்கு முன்பே ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நிகழ்ச்சி படைத்துள்ளார்.
கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் முடக்க நிலை அமலில் இருந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையும் அதனால் பொருளுதவி கோரியபோது அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் இணையம்வழி நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு தந்ததையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அங்குள்ள குழந்தைகள் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் அமெரிக்கத் தமிழ்ச் சங்க மாநாட்டில் தோல்பாவைக் கூத்தை நேரடியாக நடத்தத் தங்களை அழைத்ததாகவும் கூறினார். அதில் போதைப்பழக்கத்தால் பாதிக்கப்படும் பிள்ளைகள் குறித்து நிகழ்ச்சி படைத்ததற்குப் பெரிதும் வரவேற்பு கிடைத்தது என்றார்.
“எங்கள் நிகழ்ச்சியின் தரத்தால் ஈர்க்கப்பட்ட ஏற்பாட்டாளர்கள் பிறரிடம் பரிந்துரை செய்து, அவர்களும் அழைக்கின்றனர். இப்படித்தான் இந்தியாவிற்குள்ளும் அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் வருகின்றன,” என்றார் திரு முத்துச்சந்திரன்.
கலைக்கு மொழி வரம்பு இல்லை என்று கூறும் இவர், தமது கலையைக் கேள்விப்பட்ட இந்தோனீசியப் பெண் ஒருவர், ஒருவாரம் தம் வீட்டில் தங்கியிருந்து இதைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டதாகவும் சொன்னார்.
அண்மையில் சிங்கப்பூர்ப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பொதுமக்களுக்கும் இவர் பயிலரங்குகள் நடத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் மாணவர்கள் தாம் எதிர்பார்த்தைவிட ஆர்வமாக, ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டனர் என்றார்.
தோல்பாவைக்கூத்தை முதலில் ஆவணப்படுத்தியவர் பேராசிரியர் மு.ராமசாமி என்றும் ஆவணப்பட இயக்குநர் ஆர்.வி.ரமணி தயாரித்த தோல்பாவைக் கூத்து பற்றிய ஆவணப்படத்தில் தமது தாத்தா பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறிய முத்துச்சந்திரன், இக்கலையில் புதுமையைப் புகுத்தும்படி அறிவுறுத்தி, வழிகாட்டிய புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆய்வாளருமான திரு அ.கா.பெருமாளை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
மின்னிலக்கத் திரையிலிருந்து பிள்ளைகளைத் திசைதிருப்ப உதவிய தமது திட்டம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
கேலிச்சித்திர வடிவங்களைத் தோல்பாவைகளாகச் செய்துகொடுத்தபோது சிறுமி ஒருவர் தானாகவே அவற்றை வைத்துக் கதை சொன்னது மனநிறைவைத் தந்ததாகக் குறிப்பிட்டார் திரு முத்துச்சந்திரன்.

