தமிழ் இலக்கியங்களில் படித்த தொன்மையான இடப்பெயர்கள் மாணவப் பருவந்தொட்டே தம் சிந்தையைக் கவர்ந்ததாகச் சொன்னார் இடப்பெயர் ஆய்வுக்குப் பெயர் பெற்ற சிந்துவெளி ஆய்வாளரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலருமான திரு ஆர்.பாலகிருஷ்ணன்.
கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பன்முகத் திறன் பெற்ற இவர், தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பல்வேறு சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த பிறகு ஒடிசாவில் ‘தமிழி’ என்ற ஊர்ப் பெயரைக் கண்டு விசாரிக்கையில், அந்தக் கிராம மக்கள் தொன்மையான தமிழுடன் தொடர்புடைய குவி எனும் திராவிட மொழியைப் பேசியதையும் அதில் சங்க இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு சொற்கள் இருந்ததையும் அறிந்ததாகச் சொன்னார்.
அங்குள்ள பல ஊர்களின் பெயர்கள் நாடு, பள்ளி, பட்டி, ஊர் என்று முடிவதைக் கண்டதும் இடப்பெயர் பற்றித் தகவல் சேர்க்கும் ஆர்வம் இவருக்கு மேலும் அதிகரித்தது.
இந்தோனீசியா, ஈரான் போன்ற இடங்களில் ஒடிசா தொடர்பான பெயர்களைப் பற்றியும் சிந்துவெளி இடப்பெயர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் தரவு அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொண்டதை விளக்கினார்.
ஒரிய மொழியில் பேச, எழுத வல்லவரான இவர் அம்மக்களின் பண்பாட்டு வழக்கமாக ‘பாலி ஜாத்ரா’ என்று இந்தோனீசியாவின் பாலித்தீவுக்கு யாத்திரை வந்ததை நினைவுகூரும் நிகழ்ச்சி இடம்பெறுவதைக் குறிப்பிட்டார். அதனால் உந்துதல் பெற்று பாலிக்கும் ஒடிசாவுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வுசெய்ததாகக் கூறினார்.
சிந்துவெளி முணுமுணுத்த தமிழோசை தம் காதுகளை எட்டியதும் அதுபற்றிய விரிவான ஆய்வு மேற்கொண்டதையும் விவரித்தார்.
கீழடியைத் தோண்டுவதற்கு முன்பே தமக்கு உள்ளுணர்வாக ஏற்பட்ட சிந்தனைகளை, சிந்துவெளி ஆய்வில் குறிப்பிட்டதையும் கீழடி அகழாய்வு அவற்றுக்கு வலுச்சேர்த்ததையும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு அறிஞர்கள் சொன்னபோதும் கீழடி வெகுகாலம் ‘தோண்டாத துயரமாக’ இருந்தது என்றும் அகழாய்வுக்குப் பின்னர்தான் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன என்றும் குறிப்பிட்டார்.
கீழடியில் நிற்கையில் தமக்குச் சிந்துவெளி நினைவும் சிந்துவெளியில் நிற்கும்போது கீழடி நினைவும் சங்க இலக்கியங்களைக் கையில் எடுக்கையில் இரண்டின் நினைவும் வருவது இயல்பு என்றார்.
ஹரப்பா, மொகஞ்சதாரோ, தேசல்பூர் என அந்தப் பகுதி ஊர்களையும் கீழடி, கொற்கை, சிவகளை என இந்தப் பகுதி ஊர்களையும் நேர்கோடாக எடுத்துக்கொண்டால் சங்க இலக்கியம்தான் இவற்றை இணைக்கும் புள்ளி என்றார்.
சிந்துவெளித் தரவுகள் வன்பொருள் (hardware) என்றால் அதைப் புரிந்துகொள்ள உதவும் மென்பொருள் (software) சங்க இலக்கியங்கள் என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் இடுக்கி, தேனி, தேக்கடி, குமுளி என்ற இடப்பெயர்கள் புழக்கத்தில் இருப்பதைக் குறிப்பிட்டார்.
இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலில் தமிழில் எழுதிய பெருமை இவரைச் சாரும். அத்துடன் இளநிலை, முதுநிலைப் பட்டக் கல்வியில் தமிழ் படித்து, பின்னர் ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு.
‘பெரிதினும் பெரிது கேள்’ என்பதைத் தமது தாரக மந்திரமாகக் கொண்ட திரு பாலகிருஷ்ணன், ஆட்சிப் பணியின் பல்வேறு கட்டங்களில் தமது முடிவெடுக்கும் திறனில் சங்க இலக்கியம் முக்கியத் தாக்கம் ஏற்படுத்தியதாகக் கூறினார்.
அவ்வாறு வாழ்வதில், பாதுகாப்பாக உணரும் சூழல் அதாவது வசதி வட்டத்துக்குள் (comfort zone) இயங்க முடியாது. ஆனால் அதுதான் வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் என்றார். தமிழ் படிக்கும் காலத்திலும் ஒருபோதும் தம்மை மாற்றுக்குறைந்தவராகக் கருதியதில்லை, அனைத்திலும் சிறந்தவராகவே கருதிச் செயல்பட்டதாகக் கூறினார்.
தமிழ்தான் தமது அடிப்படை விசை என்றார். வேலைக்காகத் தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றபோது சங்க இலக்கியத் தொகுப்புகளை மட்டுமே எடுத்துச் சென்றதை நினைவுகூர்ந்தார்.
பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை, பண்பாட்டுத் துறை, நிதித் துறையில் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணி எனப் பல்வேறு முக்கியப் பணிகளில் ஈடுபட்ட இவர், தமது முக்கியமான முடிவுகளில் ஒன்றாகச் சிறுதானியங்களைப் பொது விநியோகக் கட்டமைப்பில் சேர்த்ததைக் குறிப்பிட்டார்.
அதற்காக ‘கிராமி’ விருது பெற்ற ஒருவரைப் பாடவைத்தது, ‘சிறுதானிய ஆண்டு’ அறிவிப்புக்கான விதை போட்டது போன்ற தமது செயல்களில் மாங்குடிக் கிழாரின் சங்க இலக்கியப் பாடலின் தாக்கம் இருந்ததைச் சுட்டினார்.
பசிப்பிணி மருத்துவன் இல்லம் என்ற சங்க இலக்கியச் சொற்றொடரைக் குறிப்பிட்டு, ஆட்சிப்பணியில் பல்வேறு விதங்களில் தம்மை வழிநடத்தியது சங்க இலக்கியம் என்கிறார்.
தொடர்ந்து பல்வேறு துறைசார்ந்த தகவல்களைப் படித்து தமது அறிவை மேம்படுத்திக்கொண்டாலும், தமிழ் தவிர்த்து மற்றவற்றில் பட்டமோ பட்டயமோ பெற இவர் விரும்பியதில்லை.
பாலஸ்தீனம், தான்சானியா, பூட்டான், நேப்பாளம் போன்றவற்றின் தேர்தல்களில் பணியாற்றியுள்ளார்.
ஆட்சிப் பணிக்குமுன் இவர் பணியாற்றியது இதழியல் துறை! தினமணி நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சொல் விளையாட்டுகளுக்கு அப்பால், அந்த வேலை தமக்கு இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தயார்செய்து கொள்ளவும் சிறப்பாகப் பதிலளிக்கவும் உதவியது என்றார்.
வரலாற்று அறிவு முக்கியம் என்று கூறிய திரு பாலகிருஷ்ணன் வரலாற்றைத் திறந்த மனப்பான்மையுடன் அணுகவேண்டியது முக்கியம் என்றார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராகத் தமது அடுத்தகட்ட இலக்குகளைப் பகிர்ந்துகொண்டார்.
மிகப் பெரிய தமிழறிஞர்கள் அலங்கரித்த அந்த இருக்கையும் பொறுப்பும் தம்மை நெகிழவைப்பதாக அவர் சொன்னார்.
உலகெங்கும் பல்வேறு ஊர்களில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆய்வாளர்களின் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
தோற்றத் தொன்மையும் தொடரும் இளமையும் தமிழின் சிறப்பு என்று விளக்கியதுடன் தமிழும் தமிழர்களும் எதிர்காலத் தொழில்நுட்பத்திற்கும் தயாராய் இருப்பர் என்ற நம்பிக்கையையும் திரு பாலகிருஷ்ணன் பதிவுசெய்தார்.

