தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவேன்: லீ

1 mins read
59ca5a86-1c38-47c1-b675-e12ebbb5d392
மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லீ சியன் லூங். - படம்: பெரித்தா ஹரியான்

ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) புதிய தலைமைச் செயலாளராகத் திரு லாரன்ஸ் வோங்கை முன்மொழியவுள்ளதாக அக்கட்சியின் தற்போதைய தலைமைச் செயலாளரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள மக்கள் செயல் கட்சியின் மாநாட்டு மேடையில் உரையாற்றியபோது அவர் இதைத் தெரிவித்தார்.

மாநாட்டின் இரண்டாம் மற்றும் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) உரையாற்றிய திரு லீ, தலைமைத்துவ மாற்றம், பொதுத் தேர்தலுக்கான ஆயத்தம் ஆகியவை குறித்துப் பேசினார்.

“கட்சியின் அடுத்த மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. புதிய செயற்குழுச் சந்திப்பின்போது, அடுத்த தலைமைச் செயலாளராகத் துணைத் தலைமைச் செயலாளர் லாரன்ஸ் வோங்கைத் தேர்வு செய்யும்படி நான் முன்மொழிய உள்ளேன்,” என்று கூறினார் திரு.லீ.

மேலும், “நண்பர் லாரன்ஸ் தலைமைச் செயலாளரான பிறகு கட்சியின் செயற்குழுவில் தொடர்ந்து பங்களிக்க விழைகிறேன்,” என்று குறிப்பிட்ட அவர், குழுவிற்குத் தொடர்ந்து ஆதரவும் ஆலோசனையும் வழங்கவிருப்பதாகக் கூறினார்.

புதிய தலைமைச் செயலாளரை ஆதரிப்பதற்கு இயன்றவரை சிறப்பாக செயல்படவுள்ளதாகக் கூறிய திரு லீ, கட்சியை வலுப்படுத்துவதிலும் பிரச்சினைகளையும் சவால்களையும் ஒன்றாக எதிர்கொள்ள சிங்கப்பூரர்களின் ஆதரவை ஒன்றிணைக்கவும் புதிய தலைமைக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் விவரித்தார். 

கடந்த ஆண்டுகளில் தலைமைத்துவ மாற்றங்கள் சிறப்பாக நடந்தேறியது போலவே இம்முறையும் அவை இலகுவாக அமைந்திடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் திரு லீ  கூறினார்.

குறிப்புச் சொற்கள்