‘லெப்பர்ட்’ ரக கவச வாகன கோளாறு : விளக்கமளித்த தற்காப்பு அமைச்சு

2 mins read
f872873c-d601-4979-94af-0c4c6f421a7a
 ‘லெப்பர்ட்’ ரகக் கவச வாகனம், சம்பவம் நடந்த அன்று நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் உச்ச நீதிமன்றம் அருகே சென்றபோது தற்செயலாகப் போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் மோத நேர்ந்தது. - படம்: எஸ்ஜிஐர்வி ஃபேஸ்புக்

தேசிய தின அணிவகுப்பின் தொடர்பான முன்னோட்ட நிகழ்வில்  ஜூலை 5ஆம் தேதி நடைபெற்ற தேசியக் கல்விக் காட்சியின்போது ‘லெப்பர்ட்’ ரக கவச வாகனத்தின் உட்கருவிகள் சரியாக செயல்படாததால் அவ்வாகனம்  கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை ஜூலை 11 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கவச வாகனத்தின் உட்கருவியில் ஏற்பட்ட கோளாறு, வாகனத்தை இயக்குதல் மற்றும் நிறுத்துவது உள்ளிட்ட செயல்பாட்டை வாகனம் கணிசமாக இழப்பதற்கு வழிவகுத்ததாக அறிக்கை விவரித்தது.

மேற்கூறிய நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அந்த ‘லெப்பர்ட்’ ரகக் கவச வாகனம், சம்பவம் நடந்த அன்று நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் உச்ச நீதிமன்றம் அருகே சென்றபோது தற்செயலாகப் போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் மோத நேர்ந்தது.

நார்த் பிரிட்ஜ் ரோடு பகுதியில் அன்றைய தினம் மாலை 7.22 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றபோது, கவச வாகனம் இருபது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது.

இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் நிகழ்ந்த மறுதினம் தற்காப்பு அமைச்சு அவ்வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. 

அதன் தொடர்பில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியை ஏறத்தாழ அரை மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர்.

இதற்கிடையே, இச்சம்பவத்தால் கவச வாகனத்துக்குக் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் போக்குவரத்து விளக்கு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சு, சம்பவத்தின் காரணங்கள் கண்டறியப்பட்டு, அவை சரிசெய்யப்பட்டு விட்டதால், சம்பந்தப்பட்ட கவச வாகனம் தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டங்களில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்