தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆயுள் காப்புறுதி விற்பனை சென்ற ஆண்டு 20% அதிகரிப்பு

2 mins read
கிட்டத்தட்ட $5.9 பில்லியனாகப் பதிவானது
ab22017a-2b44-42bb-891c-71759856a463
2023ஆம் ஆண்டு சரிவைச் சந்தித்த ஆயுள் காப்புறுதி விற்பனை 2024ல் மீண்டும் சூடுபிடித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2024) முதலீட்டுடன் தொடர்புடைய திட்டங்களை அதிகமானோர் நாடியதால் ஆயுள் காப்புறுதி வர்த்தகம் மிக வலுவாக மீட்சி கண்டுள்ளது.

முன்னதாக 2023ஆம் ஆண்டில் அது சரிவைச் சந்தித்தது.

சென்ற ஆண்டு ஆயுள் காப்புறுதித் துறை, ஆண்டு அடிப்படையில் 19.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இதனால் புதிய வர்த்தகச் சந்தாதாரர்கள் வாயிலாக மொத்தம் $5.87 பில்லியனை அது ஈட்டியது.

இது புதிய காப்புறுதித் திட்டங்களின் விற்பனை தொடர்பான தோராயமான மதிப்பீடு என்று சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

முதலீட்டுடன் தொடர்புடைய காப்புறுதித் திட்டங்களின் (ILPs) விற்பனை அதிகரித்தது இதற்குக் காரணம் என்று சங்கம் கூறியது. ஆண்டு அடிப்படையில், 2023ஆம் ஆண்டு $1.16 பில்லியனாக இருந்த இந்த வளர்ச்சி சென்ற ஆண்டு 41 விழுக்காடு அதிகரித்து $2.25 பில்லியனாகப் பதிவானது.

கூடுதலான வாடிக்கையாளர்கள் கடன் வாங்கி முதலீடு செய்யும் முறையின்கீழ், சொத்து சேர்ப்பதற்காக ‘ஐஎல்பி’ திட்டங்களை நாடுவதாகச் சங்கம் குறிப்பிட்டது.

குறிப்பாகப் பொருளியல் நிச்சயமற்றதன்மையும் வட்டி விகித அதிகரிப்பும் நிலவுவதால், கூடுதல் லாபத்துடன் ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பையும் வழங்கும் இத்தகைய திட்டங்களை அவர்கள் நாடுவதாகக் கூறப்பட்டது.

சென்ற ஆண்டு முழுவதும், காப்புறுதி நிறுவனத்தின் லாபத்தைச் சந்தாதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்காத காப்புறுதித் திட்டங்களின் (Non-Participating policies) விற்பனை $2.19 பில்லியன் அதிகரித்ததாகச் சங்கம் தெரிவித்தது. ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டைவிட இது 19.2 விழுக்காடு அதிகம்.

2024ல் காப்புறுதி நிறுவனத்தின் லாபத்தை போனஸ் அல்லது ரொக்க ஈவுத்தொகையாகச் சந்தாதாரர்களுக்குப் பிரித்துத்தரும் காப்புறுதித் திட்டங்களின் (Partcipating policies) விற்பனை 2.7 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு மொத்தக் காப்புறுதித் தொகை, ஆண்டு அடிப்படையில் 3.6 விழுக்காடு அதிகரித்ததாகச் சங்கம் கூறியது. இந்த வளர்ச்சியில் நிதி ஆலோசகர்களின் பங்கு 40.7 விழுக்காடு என்றும் குறிப்பிட்ட காப்புறுதி நிறுவனத்தின் திட்டங்களை விற்கும் முகவர்களின் பங்களிப்பு 33.3 விழுக்காடு என்றும் கூறப்பட்டது.

இவ்வேளையில், சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களை வாங்கியோர் எண்ணிக்கை 1.8 விழுக்காடு அதிகரித்ததாகவும் சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் கூறியுள்ளது.

ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் (IPs) சென்ற ஆண்டு கூடுதலாக 40,000 பேர் (சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும்) பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்