சாங்கி விமான நிலையத்தில் இரண்டாம் முனையத்தில் 2027ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் வாழ்க்கைமுறை மையத்தை (lifestyle hub) உள்ளடக்கும் புதிய தனியார் முனையம் அமைக்கப்படவுள்ளது.
வாழ்க்கைமுறை மையத்தை உள்ளடக்கிய புதிய தனியார் முனையம், இரண்டாம் முனையத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும். சாங்கி விமான நிலையக் குழுமமும் பிளாசா பிரீமியம் குழுமமும் இணைந்து அதனை நடத்தும்.
இரண்டாம் முனையத்தின் ‘வர்த்தக ரீதியான முக்கிய நபர்கள் முனையப் பகுதி’ (Commercially Important Persons terminal site) எனும் இடத்தை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதாக சாங்கி விமான நிலையக் குழுமம் புதன்கிழமை (ஏப்ரல் 15) அறிக்கை மூலம் தெரிவித்தது. அப்பகுதியில் இனி தனியார் முனையமும் வாழ்க்கைமுறை மையமும் அமைக்கப்படும் என்றும் குழுமம் குறிப்பிட்டது.
பிளாசா பிரீமியம் குழுமம், உலகளவில் விமான நிலையங்களில் இருக்கும் இளைப்பாறுவதற்கான வசதிகளை (lounges) நடத்துகிறது. இரண்டாம் முனையத்தில் அமையவிருக்கும் புதிய தனியார் முனையத்தில் ஒரு சொகுசு இளைப்பாறும் வசதி (deluxe lounge), மதுபானக் கூடம், சிறப்பு உணவகச் சேவைகள் (bespoke dining) போன்றவை இடம்பெறும்.
அதிகமானோர் கலந்துகொள்ளும் சந்திப்புகள், தனியார் ஒன்றுகூடல்கள் ஆகியவற்றுக்கான பகுதியும் புதிய முனையத்தில் அமைக்கப்படும்.
புதிய வசதிகள் குறித்துப் பேசிய சாங்கி விமான நிலையக் குழுமத்தின் விமான நிலையச் செயல்பாட்டு மேம்பாடுகள் மற்றும் விமான நிலைய செயல்பாட்டுச் சேவைகள் பிரிவின் துணைத் தலைவர் ஆங் சியூ மின், “இன்றைய பயணிகள் சிலர், விமானப் பயணத்துக்கு முன்பு நேரத்தைக் கழிப்பதற்கு வசதியான இடம் இருப்பதையும் தாண்டி கூடுதல் அம்சங்களை எதிர்பார்க்கின்றனர். தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் உயர்தர அனுபவங்களை அவர்கள் நாடுகின்றனர்,” என்றார். தனியார் முனையத்துக்கு அருகே பல்வேறு உணவு, நலன் (wellness) சேவைகள் வழங்கப்படும் என்றும் அவற்றின் மூலம் பயணிகள் கூடுதல் சேவைகளைத் தெரிவுசெய்துகொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிளாசா பிரீமியம் குழுமத்தின் தலைமை உருமாற்ற அதிகாரி மெய் மெய் சோங், சாங்கி விமான நிலையத்தில் ‘பிரீமியம்’ பயணிகளுக்கு உயர்தர அனுபவங்களை வழங்கத் தமது குழுமம் கடமைப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

