தமிழ்மொழி கற்பித்தல் ஒரு தொழில் என்பதை விட, அடையாளத்தைப் பாதுகாத்து, மொழியின் பெருமையை வளர்த்து, கல்வி மூலம் அதிகாரமளிக்க தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே கருதுபவர் முனைவர் விஜயராணி கோவிந்தசாமி, 65.
ஏறத்தாழ அரைநூற்றாண்டுகால அனுபவம் கொண்ட இவருக்கு இவ்வாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
“திரும்பிப் பார்த்தால் இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டனவா எனும் மலைப்பு எழுகிறது. 1976ல் பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்து 1979ல் பயிற்சிபெற்ற ஆசிரியராக வெளியேறினேன். இப்பணி எனக்கு ஏராளமான நீங்கா நினைவுகளை அளித்துள்ளது,” என்றார் இவர்.
“வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டால் எனக்கு நேரம் போவதே தெரியாது,” என்று கூறிய இவர், தம் மாணவர்களைத் தொடர்ந்து பாடல், பேச்சு, நாடகப் போட்டிகளுக்குத் தயார் செய்ததையும் நினைவுகூர்ந்தார்.
கடந்த 50 ஆண்டுகளில் கற்றல், கற்பித்தல் முறைகளில் பெருமாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காடிய முனைவர் விஜயராணி, “அப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்வதே வேதம். பல மாணவர்களுக்குச் செய்தித்தாள், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் கிடைக்காது. அன்றாட நடப்பு விவகாரங்களைச் சொல்லிக் கொடுப்பது, செய்தித்தாள் வாசிக்கச் செய்வது, புத்தகங்களை அறிமுகம் செய்வது ஆகியவற்றில் ஈடுபடுவோம்,” என்றார்.
இப்போதுள்ள மாணவர்களுக்குத் தகவல்கள் தெரிந்துகொள்வதற்கு நிறைய தளங்கள் இருப்பதாகவும் அவற்றில் எது தேவையானது என்பதைப் பகுத்தறிந்து புரிந்துகொள்ள ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டியுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டார்.
“அப்போது சுண்ணக்கட்டியால் எழுதுவது, ‘சைக்கிளோ ஸ்டைல்’ (Cyclostyle) முறை அச்சுகள் பயன்பாட்டில் இருந்தன. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்களுக்கு உதவும் கருவிகள் அதிகரித்துள்ளன. இது ஆசிரியர்களின் சுமையைக் குறைத்து சுயகற்றலையும் ஊக்குவிக்கிறது,” என்ற இவர், தாம் ஆசிரியராக இருந்தபோது பேச்சு, எழுத்துத் தமிழுக்கான வேறுபாடுகளைக் கற்பிக்க வேண்டியிருந்ததாகச் சொன்னார்.
“இப்போது, நேர்கூற்றுகளில் மாணவர்கள் பேச்சுச் தமிழில் எழுதினாலும் ஏற்கிறோம். தற்காலத்தின் தேவையை உணர்ந்து செயல்படுவதும் ஆசிரியர்களின் தன்மைகளில் ஒன்று,” என்று முனைவர் விஜயராணி சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
தம் மாணவர்கள் பல்வேறு துறைகளில் செயல்படுவதைச் சுட்டிய இவர், அவர்கள் இன்னும் தம்மை நினைவில் வைத்து மரியாதை செலுத்துவது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார். வழிகாட்டியாக அமைந்த ஆசிரியர்கள், சக ஆசிரியர்கள் என அனைவரும் தமக்கு ஊக்கமாக அமைந்ததாகக் கூறினார்.
“உடற்பயிற்சி ஆசிரியராக, ஓவிய ஆசிரியராக, கட்டொழுங்கு ஆசிரியராக, நூலகப் பொறுப்பாளராக, பாடத் தலைவராகப் பல்வேறு தளங்களில் பங்காற்றியுள்ளேன். ஓர் ஆசிரியராக என்னை மேம்படுத்திக்கொள்ள தொடந்து கற்கிறேன்,” என்ற அவர், “இதுவரை செயல்பட்டதைத் தாண்டி, இன்னும் செயற்கரிய செயல்களில் ஈடுபட விருப்பம்,” என்றும் சொன்னார்.
பணியாற்றிக்கொண்டே பட்டக் கல்வி, முதுநிலைக் கல்வி பயின்ற இவர், முனைவர் பட்டமும் பெற்றவர்.
‘பேச்சுத் தமிழ் அதிகம் புழக்கமில்லாத குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகள் எதிர்நோக்கும் சிரமங்களும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட முனைவர் விஜயராணி, “அதற்கான கள ஆய்வில் பெற்ற அனுபவம் பெரிது,” என்றார்.
தமது ஆய்வு இளம் ஆசிரியர்களுக்கு உதவியாகவும் ஊக்கமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை என்றும் இவர் சொன்னார்.
தமது பணிக்காலத்தில் பல்வேறு மாணவர்கள், இளம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய இவர், ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது குறித்து இளம் ஆசிரியர்களை வழிநடத்துகிறார்.
தம்மை வழிநடத்திய அனைவருக்கும் இவ்விருதைச் சமர்ப்பிப்பதாகவும் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் ஆசிரியராகப் பணியாற்றுவதில் பெருமைகொள்வதாகவும் முனைவர் விஜயராணி கூறினார்.